அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தனது அமைச்சு பதவியை துறக்க முடிவு செய்துள்ளார்

அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தனது அமைச்சு பதவியை துறக்க முடிவு செய்துள்ளதாக ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் அஷு மரசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிப்பதற்காகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க குழு கூட்டம் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றபோதே அவர் இந்த முடிவை எடுத்திருந்ததாக ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் அஷு மரசிங்க தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் சரத் பொன்சேகாவை சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரியிடம் கடிதம் ஒன்றினையும் கையளித்துள்ளனர்.

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் படி, அமைச்சரவையில் 30 அமைச்சர்களே இருக்க முடியும். இதில் மற்றொரு உறுப்பினர் ராஜினாமா செய்தால் மட்டுமே சரத் பொன்சேகா அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ள முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.