கேரளாவில் குடும்ப தகராறில் பெற்ற குழந்தையை கொன்று நாடகமாடிய தாயை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள சேர்த்தலா பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி ஆதிரா (வயது 24).
இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதியின் குழந்தை ஆதுஷா (1½). நேற்று காலை ஆதிரா தனது குழந்தையை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு பதறியடித்துக் கொண்டு சென்றார்.
தனது குழந்தை மூச்சு திணறல் காரணமாக மயங்கி விழுந்துவிட்டதாக கூறிய அவர் உடனே சிகிச்சை அளிக்கும்படி டாக்டர்களிடம் கூறி கண்ணீர் விட்டு அழுதார். அந்த குழந்தைக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக்க பரிசோதனை செய்தபோது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள், ஆதிராவிடம் நடந்தது பற்றி கேட்டனர். அப்போது அவர் முன்னுக்குபின் முரணான தகவல்களை கூறியதால் அவர் மீது டாக்டர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக இதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று ஆதிராவிடம் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் பெற்ற குழந்தையை ஆதிராவே தலையணையால் முகத்தை மூடி மூச்சு திணறவைத்து கொலை செய்த திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொலைக்கு வேறு காரணம் எதுவும் உண்டா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்