இங்கிலாந்தை சேர்ந்த கெயித்லின் என்ற 9 வயது சிறுமி தன்னுடைய சேமிப்பில் இருந்து 3 அமெரிக்க டாலரை பாரீஸ் நோட்ரோ-டேம் தேவாலயத்தை சீரமைக்க நன்கொடையாக வழங்கி உள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள 850 ஆண்டுகள் பழமையான நோட்ரே-டேம் தேவாலயத்தில், கடந்த 15-ந் தேதி பயங்கர தீ விபத்து நேரிட்டது. தீயின் கோரப்பிடியில் சிக்கி, நோட்ரே-டேம் தேவாலயத்தின் பெரும் பகுதி உருக்குலைந்து போய்விட்டது.
பிரான்சின் வரலாற்று சின்னமாக பார்க்கப்படும் இந்த தேவாலயம், ஏற்கனவே இருந்ததை விட அதிக அழகுடன் மீண்டும் கட்டியெழுப்பப்படும் என அதிபர் மெக்ரான் உறுதி பூண்டுள்ளார். அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இது சாத்தியமாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ள அவர், தேவாலயத்தின் புனரமைப்பு பணிகளுக்காக சர்வதேச அளவில் நிதி திரட்டி வருகிறார். உலகம் முழுவதிலும் இருந்து நிதி குவிந்து வருகிறது.
இந்த நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த கெயித்லின் என்ற 9 வயது சிறுமி தன்னுடைய சேமிப்பில் இருந்து 3 அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் ரூ.200) பாரீஸ் நோட்ரோ-டேம் தேவாலயத்தை சீரமைக்க நன்கொடையாக வழங்கி உள்ளார். பாரீசில் உள்ள நிதி திரட்டும் அமைப்புக்கு 3 அமெரிக்க டாலரையும், ஒரு கடிதம் ஒன்றையும் தபால் மூலம் அவள் அனுப்பினாள்.
அந்த கடிதத்தில் அவள், “நோட்ரே-டேம் தேவாலயத்தின் தீ விபத்து குறித்து, ரேடியோ மூலம் அறிந்து மனமுடைந்து போனேன். என்னால் முடிந்த உதவியை செய்ய விரும்பினேன். எனக்கு தெரியும் இது பெரிய தொகை இல்லை. ஆனால் இதுபோன்ற ஒவ்வொரு சின்ன தொகையும் தேவாலயத்தை சீக்கிரமாக சீரமைக்க உதவும் என நம்புகிறேன்” என குறிப்பிட்டு இருந்தாள்.