உயிர்த்தெழுந்த ஞாயிறு வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுப் பிரச்சினைகள் இருக்குமாயின் விரைவாக அவற்றை அடையாளம் கண்டு அவர்களது வீட்டுத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளார் என்று சபையின் தலைவர் எல்.எஸ்.பலன்சூரிய தெரிவித்தார். இதற்கமைவாக இவ்வாறான குடும்பங்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் தற்பொழுது இடம்பெறுகின்றன.
தற்போதைய நிலைமைக்கு மத்தியிலும், உதாகம வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டல்கள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. உதாகம என்ற மாதிரிக் கிராமத்தின் கீழ் 2500 கிராமங்களை அமைக்கும் இலக்கு ஜுன் மாதம் 31ம் திகதி பூர்த்தி செய்யப்படும்.
இந்த வேலைத்திட்டம் 2015ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் கீழ் 188 கிராமங்கள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. மேலும் 200 கிராமங்களைப் பொதுமக்களிடம் கையளிப்பதற்கு நாட்கள் குறிக்கப்பட்டிருப்பதாகவும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் எல்.எஸ்.பலன்சூரிய தெரிவித்தார்.