ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டியவை..

தற்போது உலகில் நூற்றுக்கணக்கான மாடல் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த ஸ்மார்ட்போன்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்டுள்ளன. தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்ப ஸ்மார்ட்போன்களின் விலையும் மாறுபடுகின்றன.

பெரும்பாலும் ஒரு ஸ்மார்ட் போனின் செயல்பாட்டை தீர்மானிக்கக் கூடியது அவற்றின் தொழில்நுட்ப அம்சங்கள் தான்.வெறும் நிறுவனத்தின் பெயரை வைத்து மட்டுமே ஸ்மார்ட்போன் வாங்கும் பழக்கம் குறைந்து வருகின்றது.சியாமி, ஒன் ப்ளஸ் ஆகிய நிறுவனங்கள் தொழில்நுட்ப அம்சங்களை மட்டுமே பார்த்து ஸ்மார்ட் போன் வாங்கும் பழக்கத்தை உருவாக்கியுள்ளன.

எனவே தேவைகளுக்கு ஏற்ப பொருத்தமான ஸ்மார்ட்போனை தேர்ந்தெடுக்கவும், அதனை அதே தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்ட பிற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் விலையுடன் ஒப்பிட்டு பார்த்து முடிவு செய்யவும் ஸ்மார்ட் போனின் தொழில்நுட்ப அம்சங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.

இந்த கட்டுரையில் ஸ்மார்ட்போனின் முக்கியமான தொழில்நுட்ப அம்சங்கள் எளிமையாக விளக்கப்பட்டுள்ளன.

#Operating System

ஸ்மார்ட்போன்களுக்கு இடையேயான முக்கியமான வேறுபாடு அவை எந்த இயங்குதளத்தில் (Operating System) இயங்குகின்றன என்பது தான். Android, IOS, Windows Phone ஆகியவை ஸ்மார்ட்போன்களுக்கான மூன்று முக்கியமான இயங்குதளங்களாகும்.

Android :

தற்போது உலகம் முழுவதிலும் உள்ள பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் தான் இயங்குகின்றன. ஸ்மார்ட்போன்களின் முக்கியமான பண்பு பலவகையான ஆப்ஸ்களை தேவைப்படும் நேரத்தில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்த முடியும் என்பது தான். அந்த வகையில் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தின் சிறப்பு லட்சக்கணக்கான ஆப்ஸ்கள் இந்த இயங்குதளத்திற்கு இலவசமாக கிடைப்பது தான். IOS, Windows Phone ஆகிய இயங்குதளங்களுக்கு பணம் கொடுத்து வாங்க வேண்டிய பல ஆப்ஸ்கள் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்திற்கு இலவசமாக கிடைக்கின்றன. இது தவிர இந்த இயங்குதளத்தின் மற்றொரு சிறப்பு 4000 ரூபாய் முதல் 50000 ரூபாய் வரை பல்வேறு விலைகளில் பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் கிடைப்பதாகும்.

Windows Phone :

கணினிக்கான இயங்குதள சேவையில் நிகரற்று விளங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்பு என்பது தான் இந்த இயங்குதளத்தின் முக்கிய சிறப்பு. ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை போல் இந்த இயங்குதளத்திற்கும் லட்சக்கணக்கான ஆப்ஸ்கள் கிடைக்கின்றன. ஆனால் ஒரு சில குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் மாடல்களில் மட்டுமே விண்டோஸ் போன் இயங்குதளம் இடம் பெற்றுள்ளது. பட்ஜெட் விலையில் ஆண்ட்ராய்ட் போன்களுக்கு மாற்று விரும்புபவர்கள் இந்த இயங்குதள போனை தேர்ந்தெடுக்கலாம்.

IOS :

இது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களில் மட்டுமே கிடைக்கும் பிரத்யேகமான இயங்குதளம் ஆகும். எனவே ஐபோன்களையும் ஐ ஓ எஸ் இயங்குதளத்தையும் தனித் தனியாக பிரித்து பார்க்க முடியாது. மார்க்கெட்டில் எத்தனை நிறுவனங்களின் ஸ்மார்ட் போன்கள் கிடைத்தாலும் ஆப்பிள் ஐபோன்களுக்கு ஈடாகாது. அசத்தலான ஹார்ட்வேர், டிசைன் மற்றும் சிறந்த கஸ்டமர் சப்போர்ட், ஐபோன்களுக்கு என்றே பிரத்யேகமாக கிடைக்கும் ஆப்ஸ்கள் ஆகியவை ஐபோன்களின் சிறப்பு அம்சங்களாகும். ஆண்ட்ராய்ட், விண்டோஸ் போன்களுடன் ஒப்பிடும் போது விலை அதிகமாக இருப்பதும் பல ஆப்ஸ்களை விலை கொடுத்து வாங்க வேண்டியதும் இதன் குறைபாடாகும்.

#Processor

பிராசசர் ஸ்மார்ட்போனின் இதயம் போன்ற பகுதி. ஸ்மார்ட்போன் வேகமாக துல்லியமாக இயங்க பிராசசரின் திறன் அவசியம். பொதுவாக பிராசசரின் வேகம் கிலோக் ஸ்பீட் என்ற பெயரில் GHz என்ற அளவீட்டால் குறிப்பிடப்படும். அதிக GHz கொண்ட பிராசசர் அப்ளிகேசன், கேம் , வீடியோ ப்ளேயர் ஆகியவை சிறப்பாக இயங்க உதவும். அடுத்து பிராசசர் எத்தனை Core கொண்டுள்ளது என்பதும் முக்கியம்.அதிக Core கொண்ட பிராசசர் திறன் அதிகமாக இருக்கும்.

#Screen

Size : 4 முதல் 5 இன்ச் அளவு திரை கொண்ட ஸ்மார்ட்போன்கள் ஒரே கையில் வைத்து பயன்படுத்துவதற்கு எளிமையாக இருக்கும். அதே போல் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளவும் சரியாக இருக்கும்.ஆனால் 5 முதல் 6 இன்ச் திரை கொண்ட ஸ்மார்ட்போன்கள் அளவில் சற்று பெரியதாக இருந்தாலும் இன்டர்நெட் பயன்படுத்தவும், கேம் விளையாடவும் , வீடியோ பார்க்கவும் சிறப்பாக இருக்கும்.

Resolution : திரை ரெசல்யூசன் அதிகம் கொண்ட (1920X1080 Pixels, 1280X720 Pixels) ஸ்மார்ட்போன்கள் இணையதளம் மற்றும் போட்டோ பார்க்கும் போது ஸ்க்ரோல் செய்ய வேண்டிய தேவையை குறைக்கும். மேலும் HD படங்கள் பார்க்கவும் பயன்படும். குறைந்த ரெசல்யூசன் கொண்ட திரையில் HD படங்கள் பார்க்க முடியாது.

#Ram

ஸ்மார்ட்போன் தடையில்லாமல் வேகமாக இயங்க ரேம் திறன் அதிகமாக இருக்க வேண்டும். ரேம் திறன் 2GB அல்லது அதற்கு மேல் இருப்பது நல்லது.

#Storage

இன்டர்னல் மெமரி 8 GB அல்லது அதற்கு மேல் இருப்பது நல்லது. அத்துடன் மெமரி கார்ட் மூலம் மெமரியை அதிகரித்துக் கொள்ளும் விதமாக microSD ஸ்லாட் இருப்பதும் அவசியம்.

#Camera

கேமரா பிக்சல் அதிகமாக இருந்தால் அவற்றால் எடுக்கப்படும் புகைப்படங்களும் தெளிவாக இருக்கும். குறைந்த பட்சம் கேமராவின் திறன் 5 MP க்கு அதிகமாக இருப்பது நல்லது. தற்போது பல பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களில் 13 MP திறன் கொண்ட பின் பக்க கேமரா மற்றும் 5 MP திறன் கொண்ட முன் பக்க கேமராக்கள் கிடைக்கின்றன. மேலும் வெளிச்சம் குறைவான நேரங்களில் தெளிவான புகைப்படம் எடுக்க கேமராவிற்கு ப்ளாஷ் சப்போர்ட் இருப்பதும் அவசியம்.

#Battery

பேட்டரியின் திறன் பொதுவாக mAh என்ற அளவீட்டால் குறிக்கப்படும்.அதிக திறன் கொண்ட பேட்டரி ஒரு முறை சார்ஜ் செய்தால் நீண்ட நேரத்திற்கு போனிற்கு மின்சக்தியைக் கொடுக்கும். மேலும் பேட்டரி தேவைப்படும் நேரத்தில் அகற்றிக் கொள்ளும் படி அமைக்கப்பட்டுள்ளதா அல்லது போனோடு சேர்த்து இணைக்கப்பட்டுளதா என்பதையும் கவனிக்க வேண்டும். பேட்டரி தேவைப்படும் நேரத்தில் அகற்றிக் கொள்ளும் படி இருப்பது நல்லது. போனோடு இணைக்கப்பட்டுள்ள பேட்டரியை மாற்ற நினைத்தால் சர்விஸ் சென்டர் செல்ல நேரிடும்.

#Network

முன்பு 2G, 3G நெட்வொர்க் மட்டுமே போன்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது 4G நெட்வொர்க் பயன்பாடு அதிகமாக உள்ளது. 4G என்பது அதிவேக இன்டர்நெட்டை கொடுக்கும் கனெக்சனாகும். இந்த 4G பயன்படுத்த ஸ்மார்ட்போன் அதற்கு ஏற்ற மாதிரி வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே 4G பயன்படுத்த விரும்புபவர்கள் ஸ்மார்ட் போனில் 4G வசதி உள்ளதா என்பதையும் கவனித்து வாங்க வேண்டும்.

#Performance

ஒரே மாதிரியான தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன்கள் ஒரே மாதிரியான செயல்பாட்டைக் கொடுப்பதில்லை.எனவே ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு முன்பு அந்த ஸ்மார்ட்போனின் செயல்பாடு எப்படி உள்ளது என்று அதனை பயன்படுத்திய நுகர்வோர்களின் கருத்துக்களை படித்து பார்த்து முடிவு செய்ய வேண்டியதும் அவசியமாகும்.