நியூஸிலாந்தில் அண்மையில் நடத்தப்பட்ட மசூதி துப்பாக்கி தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்த அந்நாட்டு முன்னாள் ராணுவ வீரரை கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் 15 ஆம் திகதி நியூஸிலாந்தில் உள்ள 2 மசூதிகளில் முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கி தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர்.
30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, லாஸ் ஏஞ்சலீஸ் நகருக்கு அருகே மிகப் பெரிய அளவில் பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்த மார்க் ஸ்டீவன் டோமிங்கோ (26) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளரான இவர், ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகளில் சேர்ந்து போர் பயிற்சி பெற்றுள்ளார்.
சமீபத்தில்தான் டோமிங்கோ இஸ்லாம் மதத்துக்கு மாறியுள்ளார். மிகப் பெரிய தாக்குதலை நடத்தி பலர் பலியாவதற்கு முன்பாக குற்றாவளியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே பயங்கரவாத செயலை நடத்த அவர் திட்டமிட்டு வந்துள்ளார். இதற்காக தக்க சமயத்தை எதிர்பார்த்து காத்திருந்த டோமிங்கோ,
கடந்த வார இறுதியில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட அப்பாவி அமெரிக்கர்களை படுகொலை செய்ய முடிவு செய்திருந்தார்.
அவர் பிடிபட்டதன் மூலம் அமெரிக்காவில் நடத்தப்படவிருந்த மிகப் பெரிய பயங்கரவாத தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.