தினமும் போன் பேசிய கணவன்…. மனைவிக்கு நேர்ந்த அதிர்ச்சி!

வெளிநாட்டில் உள்ள கணவரின் கதி என்னவென்றே தெரியவில்லை எனவும், அவரை கண்டுபிடித்து கொடுக்குமாறும் பெண்ணொருவர் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.

ராமநாதபுரத்தை சேர்ந்தவர் தொம்மை மிக்கேல். இவரது மனைவி செல்வம் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், ஒரு வருடத்திற்கு முன்பு ஏஜென்ட் மூலமாக மலேசியா நாட்டு வேலைக்கு எனது கணவர் தொம்மை மிக்கேல் சென்றார்.

தினமும் செல்போனில் பேசி வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் எந்தவித தொடர்பும் இல்லாத நிலையில் அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது, இதனால் நான் அதிர்ச்சியில் உள்ளேன்.

எனது கணவருக்கு என்ன நேர்ந்தது என தெரியவில்லை. படிப்பறிவு இல்லாத ஏழை குடும்பத்தை சேர்ந்த நான் கணவரை பற்றிய தகவல் தெரியாமல் உள்ளேன். எனது கணவரை கண்டுபிடித்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றி செல்வம் கூறுகையில், கணவர் குறித்து வேலை செய்யும் கம்பெனிக்காரர்களிடம் கேட்டதற்கு ஊருக்கு செல்வதாக கூறி சென்றதாக தெரிவிக்கின்றனர். அப்பாவிடம் பேச வேண்டும் என குழந்தைகள் அழுகின்றது. கணவரின் வருமானத்தில் தான் நாங்கள் வாழுகிறோம் என கூறியுள்ளார்.