பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவதற்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சி எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்று அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசநாயக்க தெரிவித்தார்.
சரத் பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிக்குமாறு கோரும் தீர்மானம் ஒன்றை ஐதேக நாடாளுமன்றக் குழு நிறைவேற்றியிருந்தது.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட போதே, சரத் பொன்சேகாவை அமைச்சராக நியமிப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி எதிர்ப்புத் தெரிவிக்காது என்று துமிந்த திசநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர், சரத் பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிக்குமாறு கோரும் கடிதம், ஐதேகவினரால் சிறிலங்கா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தில், சில அமைச்சர்கள் உள்ளிட்ட ஐதேகவின் பெரும்பாலான உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர் என்றும், ஆனாலும், இதுபற்றி சிறிலங்கா அதிபரே முடிவு செய்ய வேண்டும் என்றும், அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா தெரிவித்தார்.
சரரத் பொன்சேகா பதவியேற்பதற்காக அர்ஜூன ரணதுங்க பதவி விலகுவாரா என்று கேட்கப்பட்டதற்கு, எல்லாமே, சிறிலங்கா அதிபரின் முடிவில் தான் தங்கியுள்ளது என்றும், அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா கூறினார்.