யாழ்ப்பாணத்தில் தேடுதல்கள் மற்றும் சுற்றிவளைப்புக்களின்போது மசூதிகளை அவமதிக்கும் விதமாக பாதுகாப்பு தரப்பினர் நடந்து கொள்வதாக ஐந்து சந்தி மொஹைதீன் ஜும்மா மசூதி நிர்வாகி சரபுல் அனாம் தெரிவித்துள்ளார்.
தமது மசூதியில் தேடுதல் நடத்த வந்தபோது, அதிகாரிகள் மசூதிக்குள் பாதணிகளுடன் புகுந்தனர் என்றும் தான் பாதணிகளை கழற்றிவிட்டு வருமாறு அவர்களிடம் கோரியபோதும் அவர்கள் அதனை கேட்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு தரப்பினர் அனைத்து முஸ்லிம் மக்களையும் சந்தேக கண்களுடன் பார்க்கின்றனர். அதனால் அவர்களுடன் கடுமையாக நடந்துகொள்வதுடன், அவமதிக்கும் செயற்பாடுகளிலும் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகள் சாதாரண முஸ்லிம் மக்களுக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துகின்றதென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் பயங்கரவாதிகளை தண்டிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை என்றும் ஆனால் சாதாரண முஸ்லிம் மக்களை குற்றவாளிகள் போன்று நடத்தும் போக்கு தமக்கு மிகுந்த மன வேதனையை தருகின்றது என்றும் ஐந்து சந்தி மொஹைதீன் ஜும்மா மசூதி நிர்வாகி சரபுல் அனாம் தெரிவித்துள்ளார்.