இலங்கை தாக்குதலுக்கு மூளையாக செயற்பட்ட ரியாஸ்! இந்திய ஊடகம்…

இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டு தாக்குதலுக்கு மூளையாக செயற்பட்ட ரியாஸ் அபுபக்கர் என்ற நபர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்தியா – கேராளாவை சேர்ந்த அந்த நபர் தொடர்பில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த வகையில், கேரள மாநிலம் காசர்கோடைச் சேர்ந்த, ரியாஸ் அபுபக்கர் அங்கு, தொலைபேசி, துணி, மற்றும் நறுமணப்பொருட்கள் விற்பனை செய்யும் விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கோவையில் பணியாற்றி கொண்டிருந்த போது, சலாபி இயக்கத்தோடு அவருக்கு தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் பின்னர், காசர்கோட்டிலிருந்து ஐ.எஸ். இயக்கத்தில் இணைவதற்காக ஆப்கானிஸ்தான், சிரியா நாடுகளுக்கு சென்றவர்களுடன், ரியாஸ் online மூலம் தொடர்பு வைத்திருந்ததாகவும் மத்திய உளவுத்துறை கூறியுள்ளது.

இதேவேளை, அண்மையில் இலங்கையில் தாக்குதலை மேற்கொண்ட தீவிரவாதியான சாஹ்ரான் ஹாசிமுடன், ரியாஸ் அபுபக்கர் மிகவும் நெருங்கிய தொடர்புகளை பேணியுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த 21ம் திகதி கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் தொடர் தற்கொலை குண்டு தாக்குதலில் 250க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.