ஃபானி புயலின் நிலை.. கதிகலங்கி நிற்கும் மக்கள்.!

வங்கக் கடலில் உருவான ஃபானி புயல், அதிதீவிர புயலாக உருமாறியுள்ளது. ஒடிசா மாநிலம் புரி மாவட்டத்தின் தெற்கு கடலோரப் பகுதியில் நாளை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதிதீவிர புயலாக மாறியுள்ள ஃபானி புயல், புரி மாவட்டத்தின் கோபால்பூர் மற்றும் சந்த்பாலி பகுதிகளுக்கு இடையேயான நாளை பிற்பகலில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, மணிக்கு 175 முதல் 185 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

ஃபானி புயல் தாக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால், புரி பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் யாரும் செல்ல வேண்டாம் என்று ஒடிசா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அதேபோல், ஃபானி புயல் காரணமாக, ஒடிசாவின் 11 கடலோர மாவட்டங்களில் தேர்தல் நடத்தை நெறிமுறைகளைத் தேர்தல் ஆணையம் தளர்த்தியுள்ளது.

பயணிகளின் பாதுகாப்பு கருதி, 43-க்கும் மேற்பட்ட ரயில்களை தென்கிழக்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. மேற்கு வங்காளத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.