உடல் நலம் காக்கும் தோப்புக்கரணம்!

அதிகாலையில் பல் துலக்கி, உடல் நீராடியபின் நம் முன்னோர்களின் வழி காட்டுதலின்படி உள்ளம் உடல் நலம் காக்க அதிகாலை தோப்புக்கரணம் (உக்கி போடுதல்) போடுவோம். தோப்புக்கரணம் ஒரு உன்னதமான உடற்பயிற்சி அல்லது யோகா என்றால் உண்மை. 48 ஆண்டுகளுக்கு முன் பள்ளிகளில் தண்டனையாகவும் பயிற்றுவித்தனர். தோப்புக்கரணம் உடற்பயிற்சிகளுக்கு தாய் என சொல்லலாம். தினமும் 10 நிமிடம் தோப்புகரணம் செய்துவந்தால் பல பலன்கள் உடலுக்கு கிடைக்கும்.

தோப்புக்கரணம் சுத்தமான சம தலமான இடத்தில் (மரத்தின் கீழ் என்றால் மிகவும் நன்று) செய்ய வேண்டிய பயிற்சி. ஆடைகள் தளர்வாக இருத்தல் அவசியம். இரு கால்களையும் உடலின் அகலத்திற்கு வைத்து நின்றுகொள்ளவும், வலது காதை இடது கையாளும், இடது காதை வலது கையாளும் பிடித்துக்கொள்ள வேண்டும், இந்நிலையில் முழங்காலை மடக்கி உட்கார்ந்து எழவேண்டும். உட்காரும்போது மூச்சினை மெதுவாக உள்ளே இழுக்கவும், எழும்போது மூச்சினை மெதுவாக வெளியே விடவும். இப்பயிற்சியினை முதலில் 5 முறையும், பின் 7, 9, என்று பழகியபின் 21 முறை தோப்புக்கரணம் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

இதனால் உள்ளிழுக்கும் மூச்சுக்காற்றில் உள்ள பிராணவாயு >70% மூளைக்கு சென்று உடலுக்கு புத்துணர்ச்சி, உள்ளத்திற்கு ஒரு நிலைப்பாடு கிடைக்கிறது. நம் நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு ஆரோக்கியம் அடைகிறோம். குழந்தைகளுக்கு மூளை செயல்பாடுகள் அதிகரித்து கல்வி, கேள்வி அறிவுச்செல்வம் பெருகுகிறது.