ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த தொடரின் 50 வது லீக் போட்டி தோனி தலைமையிலான சென்னை அணிக்கும் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணிக்கும் நேற்று சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது.
அந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்ய சென்னை அணியின் துவக்க வீரர்களான டூ பிளசிஸ் மற்றும் ஷேன் வாட்சன் களமிறங்கினர். இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடுவார் என எதிர்பார்த்த வாட்சன் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.
இதனையடுத்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா டூ பிளசிஸ் உடன் இணைந்து சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். சிறப்பாக ஆடிய டூ பிளசிஸ் 41 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார்.
சுரேஷ் ரெய்னா சிறப்பாக ஆடி ஐபிஎல் வரலாற்றில் தனது 37வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இவர் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் என 37 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து தவானிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய தோனி அதிரடியாக ஆடி 3 சிக்சர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் கடைசிவரை அட்டமிழக்காமல் 22 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார்.
ஜடேஜா 2 சிக்சர் மற்றும் 2 பவுண்டரிகள் விளாசி 10 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து மோரிஸ் ஓவரில் அவுட் ஆகினார். ராயுடு 5 ரன்களுடன் களத்தில் இருந்தார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி ஆரம்பத்தில் இருந்தே தடுமாறியது. அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மட்டும் அதிகபட்சமாக 31 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து தோனியால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு வெளியேறினார்.
அந்த அணியின் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்தநிலையில் ஆட்டத்தின் 17 வது ஓவரிலேயே, 99 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, டெல்லி அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சென்னை அணியின் பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளும், ஜடேஜா 4 விக்கெட்டுகளும், ஹர்பஜன் மற்றும் தீபக் சாகர் தலா ஒரு விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினர். சென்னை அணியின் இந்த வெற்றியினால் புள்ளிபட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது.
இந்நிலையில், நேற்றைய ஆட்டம் குறித்து ஹர்பாஜன் சிங்க் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவு செய்தவை,
இஞ்யார்ரா, பேரு @chennaiipl, ஊறு சென்னை, சம்பவ இடம் சேப்பாக்கம், கேப்டன் பேரு #தல, ஒத்தைக்கு ஒத்தையா வந்து @IPL ல நின்னுப்பாருங்கவே! வேற லெவல் ஆட்டம்போட தயாரா இருக்காங்க நம்ம சூப்பர் fans! நாங்களும் தயார்! Thanks for the super support, @CSKFansOfficial! #WhistlePodu #Yellove pic.twitter.com/zQrxFSfXZa
— Harbhajan Turbanator (@harbhajan_singh) May 1, 2019