வியக்கவைக்கும் அதிசயம்.!! திகிலூட்டும் இரத்த அருவி.!

எங்கு பார்த்தாலும் பனி மலைகள்… பனிப்பாறைகள் என அண்டார்டிக்கா கண்டம் முழுவதுமே ஒரே பனிப்படலமாகக் காட்சியளிக்கும்.

பனிகள் சூழ்ந்த இந்த கண்டத்தில் தான் விசித்திரமான, வித்தியாசமான அருவி ஒன்று உள்ளது.

அருவியில் அப்படி என்ன அதிசயம் உள்ளது என்று நினைக்கிறீர்களா?

அதிசயம் இருக்கே… வாங்க தெரிஞ்சுக்கலாம்….!!

அண்டார்டிக்காவில் மெக் மெர்டோ என்ற பள்ளத்தாக்கில் டாய்லர் ஃகிளாஸியோ என்னும் அருவி உள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஹிரிஃபித் டாய்லர் என்ற புவியியல் ஆராய்ச்சியாளர் இந்த அருவியைக் கண்டறிந்ததால் இதற்கு டாய்லர் ஃகிளாஸியோ என்ற பெயர் வந்தது.

இந்த அருவியில் இருந்து வரும் தண்ணீரானது அடர் சிவப்பு நிறத்தில் பார்ப்பதற்கு ரத்தம் பீறிட்டு வருவதுபோல இருக்குமாம்.

பனிப்பாறைகளால் முழுவதும் நிரம்பிய அண்டார்டிக்கா கண்டத்தில், குறிப்பிட்ட ஒரு பனிப்பாறையில் இருந்து மட்டும் இவ்வாறு இரத்த நிறத்தில் நீர் அருவியாக பாய்வது அதிசயமாக உள்ளது.

அதிக அளவு பாசிகள் இருப்பதால்தான் இந்த அருவியில் அடர் சிவப்பு வண்ணத்தில் தண்ணீர் வருகிறது என சில ஆராய்ச்சியாளர்கள் கூறினார்கள். ஆனால், அது உண்மையில்லை என்று கண்டறிந்தனர் மற்றொரு ஆராய்ச்சியாளர்கள்.

விலகியது மர்மம்..

சுமார் 2 மில்லியன் ஆண்டுகளாக பனிப்பாறையின் அடியில் ஒரு ஓடை ஓடிகொண்டிருப்பதாகவும், அங்கு வாழ்ந்து வந்த நுண்ணுயிரிகளில் இருந்து வெளிவந்த சல்ஃபர் மற்றும் இரும்பு ஆகியவற்றால் தான் அந்த சிவப்பு நிறம் தோன்றுகிறது என கண்டறிந்துள்ளனர்.

மேலும், அந்த ஓடையின் நீரில் ஆக்ஸிஜனின் அளவு வெகுவாக இல்லாததால் நுண்ணுயிரிகள் சல்ஃபேட்டை உணவாக கொண்டே சுவாசித்து வாழ்ந்து வருவதாக கூறுகின்றனர்.

அடர் சிவப்பு நிறத்தில் இந்த அருவி இருப்பதற்கான காரணத்தை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்களுக்கு காத்திருந்த மற்றொரு அதிர்ச்சியான விஷயம்.

மற்றொரு அதிசயம் :

ஆக்ஸிஜன் இல்லாத அந்த நீரினில் உலகில் வேறு எந்த மூலையிலும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத 17 வகையான நுண்ணுயிரிகள் இருந்தது ஆராய்ச்சியாளர்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உயிர் வாழ்வதற்கு ஆதாரமான ஆக்ஸிஜன் அதிகளவில் இல்லாத அந்த ஓடையில் எவ்வாறு இத்தனை அரிய வகை நுண்ணுயிரிகள் இருக்கிறது? என்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓடையில் எந்தவித வெளிச்சமும் இன்றி அந்த வினோத நுண்ணுயிரிகள் எப்படி உயிர் வாழ்ந்து வருகின்றது என்பது ஆச்சரியமாகவே உள்ளது.

ஆனால், இந்த அருவி எங்கு உருவாகிறது? எங்கு முடிகிறது? என்ற கேள்விக்கான விடைகள் இன்றும் கண்டுபிடிக்கப்படவில்லை.