ஏழுமலையானிடம் உள்ள நாணயங்களை எடைபோட்டு வாங்கும் ரிசர்வ் வங்கி

திருப்பதி தேவஸ்தானத்திடம் உள்ள 90 டன் புழக்கத்தில் இல்லாத நாணயங்களை, டன் ஒன்றுக்கு 27 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிக்கொள்ள ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆந்திர மாநிலம் திருப்பதியில், உலகப் புகழ்பெற்ற ஏழுமலையான் திருக்கோயில் உள்ளது. இங்கு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். அப்படி வரும் பக்தர்கள், தங்கள் வேண்டுதல் நிமித்தம் முடிப்பு கட்டி நாணயங்களை சேகரித்து வைத்து, அதைக் கொண்டுவந்து உண்டியலில் செலுத்துகின்றனர். இப்படி செலுத்தப்படும் காணிக்கைகளில், தற்போது புழக்கத்தில் இல்லாத 25 பைசா மற்றும் அதற்கு கீழ் மதிப்புள்ள நாணயங்களும் வருவதுண்டு.

குறிப்பிட்ட நாளில் உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கையாக வந்த பணத்தை எண்ணும்போது, புழக்கத்தில் இல்லாத நாணயங்களை தனியே பிரித்தெடுத்து சாக்கு மூடைகளில் கட்டி வைப்பது வழக்கம். இப்படி சேர்க்கப்பட்ட நாணயங்கள் மட்டும், சுமார் 90 டன் அளவுக்கு தேவஸ்தான நிர்வாகத்திடம் இருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில், புழக்கத்தில் இல்லாத நாணயங்களை வாங்கிக்கொள்ள இந்திய ரிசர்வ் வங்கியிடம் தேவஸ்தான நிர்வாகம் கோரிக்கை வைத்திருந்தது. இதையேற்ற இந்திய ரிசர்வ் வங்கி, திருப்பதி தேவஸ்தானத்திடம் இருக்கும் 90 டன் நாணயங்களை, டன் ஒன்றுக்கு 27 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிக்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.