தமிழகத்தில் குடி போதையில் காரை ஓட்டி வந்த டிரைவரால் மூதாட்டி ஒருவர் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சி வெளியாகி பார்ப்போரை பதற வைக்கிறது.
சென்னை வில்லிவாக்கத்தில் இன்று காலை சிவப்பு நிற இனோவா கார் ஒன்று அங்கிருந்த மூதாட்டி மற்றும் ஒருவரை கண்மூடித்தனமாக மோதிவிட்டுச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்தது.
அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில், அந்த சம்பவம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் காலை 8 மணிக்கு நடந்துள்ளது. அந்த காரானது அதிவேகத்தில் வருவதைக் கண்ட மக்கள் வழிவிட்டுள்ளனர். இருப்பினும் ஒரு சிலரை இடித்துவிட்டுச் சென்றதால், அங்கிருந்த மக்கள் காரை விரட்டியுள்ளனர்.
இதனால் டிரைவர் அதிவேகாம ஓட்டியதால், அப்போது அங்கு டீ கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த இருவர் மீது மோதிவிட்டு நிற்காமல் செல்ல, இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் காரை விடாமல் துரத்த மின்கம்பம் ஒன்றில் மோதி நின்றுள்ளது.
உடனே விரட்டிய மக்கள் காரின் கதவை திறந்து டிரைவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். அதன் பின் இந்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் அந்த நபரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவம் காரணமாக சரசா (65),மோகன் (40) ஆகியோர் பலியாகியுள்ளனர். சரசாவும் மோகனும் கடையில் டீ குடித்த சமயத்தில் அவர்கள் மீது கார் மோதியுள்ளது.
இதையடுத்து சாலையில் நடந்து சென்ற ஆதிலட்சுமி (50) என்ற மூதாட்டி மீது கார் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்டார். இதனால் அவரின் காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபத்தை ஏற்படுத்திய நபரின் பெயர் தேவேந்திரன் எனவும் அவர் மண்ணடியைச் சேர்ந்தவர் என்பதும் பொலிசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.