கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாயலத்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் நிரப்பிய வான் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட இந்த வான் பாணந்துறை பிரதேசத்தில் வைத்து தயாரிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்ட நேரத்தில் நேரத்திற்கு வெடிக்கும் (Time Bomb) இந்த குண்டு பாணந்துறையில் வைத்து தயார் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பு உறுப்பினர்களுக்கு சொந்தமானதென கூறப்படும் பாதுகாப்பான வீட்டில் வைத்து இது தயாரிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு தயார்படுத்தப்பட்ட வானினிலிருந்து அகற்றப்பட்ட பின்வரிசை ஆசனம் சாய்ந்தமருது பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கொச்சிக்கடை தேவாலயத்தில் குண்டு வெடித்து ஒரு மணித்தியாலத்தில் இந்த குண்டு வெடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. எனினும் மின்சாரம் உரிய முறையில் பொருத்தப்படாமையினால் குண்டு வெடிக்காமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சலவை இயந்திரம் ஒன்றில் டைமர் எனப்படும் மணிக்கூட்டினை பொருத்தி இந்த குண்டு ஒட்டி வைக்கப்பட்டுள்ளது.
தேவாலயத்தில் இருந்து 80 மீற்றர் தூரத்தில் இந்த வான் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆலயத்தில் குண்டு வெடித்ததனை பார்ப்பதற்கு வரும் மக்களை இலக்கு வைத்து இந்த குண்டை வெடிக்க வைப்பதற்கே திட்டமிடப்பட்டிருந்ததாக விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
வெளியில் தெளிவாக தெரியும் வகையில் வானுக்குள் 1000 ரூபாய் தாள்கள் வைக்கப்பட்டிருந்தன. வானின் ஒரு பகுதியில் துணி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. துணியை எடுத்து 1000 ரூபாய் நாணயத்தாளை பார்க்க முயற்சித்தால் குண்டு வெடிக்கும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.
12.5 கிலோ எரிவாயு அடங்கிய 3 சிலிண்டர்கள் வானில் பொருத்தப்பட்டிருந்தன. குறிப்பிட்ட நேரத்தில் இந்த குண்டு வெடித்திருந்தால் பெருந்தொகை மக்கள் உயிரிழந்திருப்பார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.