பொள்ளச்சியில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துகளை எடுத்துக்கொண்டு விடிய விடிய ஆட்டம் போட்டு ரகளையில் ஈடுபட்ட 159 மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் ‘அக்ரி நெஸ்ட்’ எனப்படும் ரிசார்ட்டில், அப்பகுதியை சுற்றியுள்ள கல்லுாரிகளில் படிக்கும் கேரள மாணவர்கள் மது உள்ளிட்ட போதை பொருட்களை வைத்து விருந்து நடத்தியுள்ளனர்.
விடிய விடிய பெரிய ஸ்பீக்கர்களை வைத்து ஆட்டம் போட்டது மட்டுமில்லாமல், கூச்சலிட்டுக்கொண்டு அடிதடியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் உடனடியாக உள்ளே புகுந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட கஞ்சா, போதை மாத்திரைகள், அபின் உள்ளிட்டவைகளுடன் ஏராளமான மது பாட்டில்களையும் கைப்பற்றினர்.
இந்த நிலையில் 159 மாணவர்களை கைது செய்துள்ள பொலிஸார், அனுமதி கொடுத்த ரிசார்ட்டின் உரிமையாளரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பின்னர் இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், இன்ஸ்டாகிராம் மூலம் குழு அமைத்து மாணவர்கள் இணைந்திருப்பதாகவும், பலமுறை இதுபோன்று விருந்து நடத்தியிருப்பதாகவும் கூறியுள்ளனர்.
மேலும் இதில் சில தமிழக மாணவர்களும் ஈடுபட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.