தமிழகத்தில் உச்சக்கட்ட வெட்ப நிலையாக கருதப்படும் அக்னி வெயில் இன்று தொடங்கியது.
இம்மாதம் 29 ஆம் தேதி வரை கத்திரி வெயில் நீடிக்கும் இந்த கத்திரி வெயில் தொடங்கியதையடுத்து தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் அனல் காற்று வீசியது. பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் வெளுத்து வாங்கியது.
உச்சகட்டமாக திருத்தணியில் 112 டிகிரி, வேலூரில் 111 டிகிரி, வெயிலும் இருந்தது. சேலம், நாமக்கல், கோவை, ஈரோடு, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, பெரம்பலூர், விழுப்புரம், தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் வெயில் 105 டிகிரிக்கு மேல் இருந்தது. மொத்தம் 15 மாவட்டங்களில் வெயில் சதமடித்தது.
அக்னி வெயில் தொடங்கியதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாயினர். சாலைகளில் அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
இந்த கத்திரி வெயில் காலம் முடியும் வரை வயதானவர்களும், பொதுமக்களும் சில எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளார்கள். காலை 9 முதல் 11 மணிக்குள் வெளியில் சென்று விட்டு வீடு திரும்ப வேண்டும்.
11 மணிக்கு மேல் மாலை 4 மணி வரை வெயிலில் நடமாடக்கூடாது. அப்படி அவசியம் ஏற்பட்டால் தலையில் தொப்பி அணிய வேண்டும். அல்லது குடை பிடித்து செல்ல வேண்டும்.
நீர்சத்து உள்ள பழங்களை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி தண்ணீர் அருந்த வேண்டும். கூடுமானவரை உச்சிநேர வெயிலில் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.