தமிழகத்தில் பெற்ற தாய் கண்முன்னே மகன் லாரியில் உடல் நசுங்கி பலியான சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவேற்காடு செல்லியம்மன் நகரைச் சேர்ந்தவர் குமரேசன். மெக்கானிக்கரான இவருக்கு கீதா என்ற மனைவியும் தர்ஷன்(5), தியா (3) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
தர்ஷன் அங்கிருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் யூகேஜி படித்து வருகிறான்.
இந்நிலையில் கீதா இன்று காலை மதுரவாயலில் இருக்கும் உறவினரின் வீட்டிற்கு செல்வதற்காக இரு சக்கர வாகனத்தில் தன் மகன் மற்றும் மகளை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார்.
அப்போது வானகரம் சிக்னல் அருகே வந்த போது, போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால், கீதா தனது பைக்கை இடதுபுறம் சாலையை விட்டு இறங்கி ஓரமாக சென்றுள்ளார்.
அதன் பின் மீண்டும் சாலையில் ஏற முற்பட்ட போது, இருசக்கர வாகனம் அங்கிருக்கும் மணலில் சிக்கியதால் தடுமாறியுள்ளது. அப்போது இருசக்கர வாகனத்தில் இருந்த மகன் தர்சன் எதிர்பார்தவிதமாக கீழே விழ, பின்னால் வந்த தண்ணீர் லாரி தர்சன் மீது ஏறியதால், அந்த இடத்திலே உடல் நசுங்கி பலியாகியுள்ளார்.
தன் கண்முன்னே மகன் இறப்பதைக் கண்ட கீதா கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அங்கு விரைந்து வந்த பொலிசார், லாரி ஓட்டுனரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.