தமிழகத்தில் கோவில் பிரசாதம் கொடுத்து பெண்களிடம் லட்சக்கணக்கில் பணம் மற்றும் நகை மோசடியில் ஈடுபட்ட நபரை பொலிசார் கைது செய்தனர்.
நெய்வேலி டவுன் ஷிப், முருகன் கோயில் தெருவைச் சேர்ந்த தங்கராசு. இவருக்கு செந்தில்குமார்(39) என்ற மகன் உள்ளார். இவர் அங்கிருக்கும் டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவர் ஓய்வு நேரத்தில் நெய்வேலியில் இருக்கும் சாய்பாப கோவிலுக்கு சென்று அங்கிருக்கும் நிர்வாகிகளுக்கு உதவி செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வருவதும், கோயில் பிரசாதங்களை பக்தர்களின் வீட்டிற்கே சென்று கொடுத்து வருவதுமாக இருந்து வந்ததால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு செந்தில் நன்கு தெரிந்த நபராக இருந்துள்ளார்.
குறிப்பாக பெண் பக்தர்களிடம் கனிவாகவும், நட்புடனும் பழகி வந்துள்ளார். இந்த நட்பை செந்தில்குமார் நன்றாக பயன்படுத்தி கொண்டு பெண்களிடம் சாதுர்யமாக பேசி அவர்களை ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை பறித்து சென்றுள்ளார்.
நெய்வேலியைச் சேர்ந்த பெண் ஒருவர் மற்றும் இவரிடம் காரை கொடுத்து ஏமாந்த வெங்கடேசன் ஆகியோர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரிலே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதன் பின் பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்ட செந்தில்குமாரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதில், பல பெண்களிடம் நட்பாகப் பழகி இதுவரை 20 லட்சத்திற்கும் மேல் பணம், நகைகளை ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் 50-க்கும் மேற்பட்டவர்களுடன் இவர் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.