வடக்கு பாடசாலைகள் தொடர்பில் விசேட அறிவித்தல்!

வடக்கில் பாடசாலைகள் தொடங்கும் நேரத்தில் மாற்றம் கொண்டுவந்துள்ளதாக தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

அந்தவகையில், வடக்கு மாகாணப் பாடசாலைகளை காலை 8 மணிக்கு ஆரம்பித்து பிற்பகல் 2 மணிக்கு நிறைவுசெய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளால் பாடசாலைகளை காலை 7.30மணிக்கு தொடங்குவதில் உள்ள சிக்கல் நிலைமைகளைக் கருத்திற்கொண்டே இந்த மாற்றம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளால் பாடசாலைகளைத் தொடங்குதல் தொடர்பாக அதிபர்கள், ஆசிரியர்களின் கருத்துக்கள் கண்டறியப்பட்டு இவ்விடயம் தொடர்பாக வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதில் பாதுகாப்புப் படையினரின் சோதனை நடவடிக்கைகளால் மாணவர்களின் போக்குவரத்து, அதிபர்கள், ஆசிரியர்களின் போக்குவரத்தில் ஏற்படும் தாமதம் என்பன சுட்டிக்காட்டப்பட்டது.

இதனால் பாடசாலைகளை காலை 8 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 2 மணிக்கு நிறைவு செய்வதற்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் அனுமதி வழங்கியுள்ளார்.

பாடசாலைகளை காலை 8 மணிக்கு ஆரம்பிக்க, பாடசாலையின் அதிபர்கள் அந்தந்த வலயக் கல்விப் பணிப்பாளர்களிடம் அனுமதி பெற்றுக்கொள்ள முடியும் எனவும், வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு இது பற்றி அறிவுறுத்துவதாகவும், இது ஒரு தற்காலிக ஏற்பாடகவே இருக்கும் எனவும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் கூறியுள்ளார்.

ஆகையால் இடர்பாடுகள் உள்ள பாடசாலைகளின் அதிபர்கள் உடனடியாக வலயக் கல்விப் பணிப்பாளர்களின் அனுமதியைப் பெற்று பாடசாலைகளை காலை 8 மணிக்கு தொடங்குமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கேட்டுள்ளது.

பாடசலை ஆரம்ப திகதி அறிவிப்பு!

அரசாங்க பாடசாலைகளின் இரண்டாம் தவணை கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ள திகதியை அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி தரம் ஒன்று முதல் 5 வரையான வகுப்புக்களை எதிர்வரும் 13 ஆம் திகதியும், தரம் 6 முதல் 12 வரையான வகுப்புக்களை திட்டமிட்டபடி எதிர்வரும் திங்கட்கிழமையும் ஆரம்பிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.