ஹாங்காங்கில் நடந்த ஆசிய பளுதூக்கும் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த ஆர்த்தி அருண் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். பல்வேறு நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் கலந்துகொண்ட இந்த தொடரில் இவர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் டாக்டர் ஆர்த்தி. பல் மருத்துவரான இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
குழந்தை பெற்ற பிறகு அதிகரித்த உடல் எடையை குறைப்பதற்காக, அவர் ஜிம்முக்கு சென்றுள்ளார். அங்கு, பலரும் வலுதூக்கும் பயிற்சிகளை செய்வதைப் பார்த்து, இவருக்கும் ஆர்வம் வந்துள்ளது.
இதைதொடர்ந்து முறையாக பயிற்சி பெற்ற பல போட்டிகளில் பங்கேற்ற ஆர்த்தி, வலுதூக்குதலில், மாநில தேசிய அளவில் பல சாதனைகளைப் படைத்தார்.
இந்த நிலையில், கடந்த வாரம் ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசிய பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியின் 72 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
பவர்லிஃப்டிங் போன்ற போட்டிகளில் சாதிக்கும் வீரர், வீராங்கனைகளை அரசு ஊக்குவித்து உதவ வேண்டும் என்று ஆர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் காமன்வெல்த் மற்றும் உலக பளு தூக்கும் போட்டிகளில் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.