சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது!

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப்பட்டவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே நேற்றிரவு  கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

தனது முகநூலில் உள்ள படங்களை எடுத்து எவரோ ஒருவர் தனக்கு எதிராக இந்த வேலையைச் செய்துள்ளார் என்று சந்தேகநபர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

தேசிய தௌஹீத் ஜமாத் – யாழ். மாவட்டம் என்ற பெயரிடப்பட்ட இந்தக் கடிதம்  அனுப்பிவைக்கப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

இந்தத் தேசம் அல்லாவின் தேசம். இங்கு இஸ்லாமிய மக்கள் மட்டுமே வாழ முடியும். இது எமக்கான புனித பூமி. உங்களைப் போன்ற சிலுவை தூக்கிகளோ வேறு யாருமோ வாழ முடியாது. வாழ விடவும் மாட்டோம்.

புதன்கிழமை 8.5.19 பாடசாலையில் குண்டு வைப்போம். எல்லா சிலுவை தூக்கி மாணவர்களையும் கொல்லுவோம். அல்லா மேல் ஆணை. எல்லாப் பாடசாலைகளும் குண்டு வைக்க ஜிகாதிகள் வந்துள்ளோம். இன்சா அல்ல, எங்கள் குடும்பத்தை அல்லா காப்பாற்றுவார், எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.