தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் சிறிய காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் கொட்டாச்சி. அவருக்கு சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் அவர் அவ்வப்போது சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
இவரது மகள் இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவிற்கு மகளாக நடித்து பெருமளவில் பிரபலமான குழந்தை மானஸ்வி. அவர் அதனைத்தொடர்ந்து பரமபத விளையாட்டு திரைப்படத்தில் திரிஷாவிற்கு மகளாக நடித்து வருகிறார். மேலும் அப்படத்தில் அவர் வாய் பேச முடியாத, காது கேளாத குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.அதுமட்டுமின்றி மானஸ்வி பல விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் கொட்டாச்சி தற்பொழுது சொந்த வீடு ஒன்று வாங்கி அதில் குடியேறியுள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில், சென்னையில் என் வாழ்க்கை வெறும் 800 ரூபாய் வாடகையில் ஒரு மேன்சனில் ஆரம்பித்தது. நடிக்கத் துவங்கி கொஞ்சம் வருமானம் கிடைக்கும் நிலையில் 2000 ரூபாய் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினேன்.
பின்னர் திருமணமாகி 7000 ரூபாய் வாடகைக்கு குடியேறினோம். அப்பொழுதெல்லாம் இவ்வளவு ரூபாய் வாடகை கொடுக்கிறோமே என வருத்தமாக இருக்கும். மேலும் எனது மனைவிக்கு வாடகை வீட்டில் வசித்து வந்தது சிறிதும் பிடிக்கவில்லை.
பின்னர் என் மகள் பிறந்த பிறகு நிறைய நல்ல விஷயங்கள் எனது வாழ்க்கையில் நடக்க ஆரம்பித்தது. நாங்கள் 15 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினோம. தொடர்ந்து எனது மகள் மூன்று வயதில் நடிக்க துவங்கினார்.அப்படியே எங்களது வாழ்க்கை தரம் வளர்ச்சியடைந்து தற்பொழுது அவளுக்கு ஆறு வயசு ஆகிறது. நாங்கள் ஆசைப்பட்டது போல சொந்த வீடு ஒன்றை வாங்கி விட்டோம்.
எனது பல ஆண்டு கனவு நிறைவேறிவிட்டது. இதற்கு காரணம் எனது மனைவி குழந்தை என்ற இரண்டு தேவதைகளால் தான் நடந்தது என பெருமிதத்துடன் கூறியுள்ளார்.