தனியார் கல்வி நிறுவனங்கள் மாலை 5.30க்கு முன்னர் முடிக்க வேண்டும்!

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்களில் பாதுகாப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டு மாணவர்கள் அனைவரும் சோதனையிடப்பட்ட பின்னரே வகுப்பிற்குள் அனுமதிக்க வேண்டும் என யாழ்ப்பான பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தினேஷ் கருணாநாயக்க தனியார் கல்வி நிறுவன இயக்குனர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பணத்தில் உள்ள தனியார் கல்வி நிலைய நிர்வாகிகளுக்கும் பொலிசார் மற்றும் அதிகாரிகளுக்குமான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநரின் ஏற்பாட்டில் யாழ்ப்பான மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது.இந்த கலந்துரையாடலிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களையடுத்து ஏற்பட்டிருந்த குழப்பநிலையில் தற்போது பாடசாலைகளின் செயற்பாடுகள் மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நாம் தனியார் கல்வி நிறுவனங்களின் பாதுகாப்புக்களையும் உறுதிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.அந்தவகையில் இந்த கலந்தரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

தனியார் கல்வி நிறுவன நிர்வாகிகள் மாணவர்களின் பாதுகாப்பில் அக்கறை காட்டுங்கள்.உங்கள் கல்வி நிறுவனத்துக்கு என பாதுகாப்பு குழு ஒன்றை முதலில் நியமியுங்கள் அத்துடன் மாணவர்களுக்கு என பிரத்தியோகமான அடையாள அட்டைகளை வழங்குங்கள்.

மாணவர்கள் வகுப்பிற்கு வரும் போது நுழைவாயிலில் வைத்து முழுமையாக சோதனையிடுங்கள். அவர்கள் கொண்டு வரும் பொருட்களில் கூடுதல் அவதானம் செலுத்துங்கள். பின்னர் வகுப்பு நிறைவடையும் போதும் அவர்கள் பயணிக்கும் வாகனங்கள் தொடர்பில் அக்கறை செலுத்துங்கள்.

மாணவர்களின் பாதுகாப்பு தேவைகளுக்கு இராணுவம் மற்றும் பொலிசாரின் உதவிகள் தேவைப்படின் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

தற்போதைய நாட்டு சூழ்நிலையில் இரவு நேர வகுப்புக்கலை முற்றாக தடை செய்யுங்கள்.குறிப்பாக மாலை 5.30 மணிக்கு முன்னராக கல்வி நிறுவனங்களை முடிந்துக் கொள்ளுங்கள்.

மாணவர்களின் பாதுகாப்பில் அனைத்து தரப்பினரும் அக்கறை கொண்டு செயற்படுங்கள் என்றார்.