நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே தொன்மை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனத்தின் 24வது குரு மகா சந்நிதானமாக அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகளின் உள்ளார். அவரது மெய்க்காவலராக நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படையைச் சேர்ந்த ஜெகன்ராஜா என்பவர் தமிழக காவல்துறையால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி அளவில் திருவாவடுதுறையில் ஒரு பெண் நடத்தி வரும் பெட்டிக்கடையில் காவலர் ஜெகன்ராஜா பேசிக் கொண்டிருந்துள்ளார். அதை அப்பகுதியைச் சேர்ந்த மதி என்பவர் செல்போனில் படம் பிடித்ததால் செல்போனை பறித்துக்கொண்டு காவலர் ஜெகன்ராஜா அவரை விரட்டியுள்ளார். ஆத்திரமடைந்த மதி சற்றுநேரத்தில் உருட்டுக் கட்டையுடன் திரும்பி வந்து காவலருடன் தகராறு செய்துள்ளார்.
கோவம் தலைக்கேறிய ஜெகன்ராஜா ஆதீனத்தின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ள துப்பாக்கியால் மதியின் காலில் சுட்டுள்ளார். அதைத் தட்டிகேட்க அந்த கிராமத்தின் நாட்டாமை செல்வராஜ் என்பவரையும் துப்பாக்கியால் சுட்டதில் இரண்டு கால்களிலும் துப்பாக்கிக் குண்டு துளைத்து பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
துப்பாக்கி சத்தம் கேட்டு திரண்ட அப்பகுதி மக்களை மிரட்டும் விதமாக ஜெகன்ராஜா வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதுடன் மதிவாணன் என்பவரையும் துப்பாக்கியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். ஆத்திரமடைந்த மக்கள் ஜெகன்ராஜாவின் இருசக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்தினர்.
காயமடைந்த மதி, செல்வராஜ் இருவரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தகவலறிந்த வந்த குத்தாலம் போலீசார் அப்பகுதியில் பதுங்கியிருந்த காவலர் ஜெகன்ராஜாவை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இதையடுத்து காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதுடன், பதற்றத்தை தணிக்க போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்