சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் நகரில் சிறைக்கைதியான இலங்கை நபர் ஒருவர் உடல் நலக் குறைவால் பரிதாபமாக மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
42 வயதான அந்த நபர் அபராதம் செலுத்த பணம் இல்லாததால் கடந்த இரு நாட்களாக லூசெர்ன் நகரில் அமைந்துள்ள தடுப்பு காவல் மையத்தில் சிறை வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் திடீரென்று அவருக்கு உடல நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. கண்காணிப்பு கமெராவில் இதை அங்குள்ள அதிகாரிகளும் பார்த்துள்ளனர்.
ஆனால் அவர்கள் சுதாரித்து நடவடிக்கை எடுக்கும் முன்னர் அந்த நபர் சம்பவயிடத்திலேயே மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கடுமையான உடல் நலக் கோளாறு காரணமாகவே அவர் மரணமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, சிறையில் அடைக்கும் முன்னர் மருத்துவர் ஒருவரால் அந்த இலங்கையர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும்,
ஆனால் மருத்துவர் அவரை சிறை வைக்கலாம் என ஒப்புதல் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
தற்போது அவர் திடீரென்று மரணமடைந்துள்ளதால், அவரது மரண காரணம் தொடர்பில் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அவரது நீதிமன்ற தீர்ப்பில், அபராதம் செலுத்த தவறினால் ஒரு நாள் முதல் 6 மாதம் வரை சிறை தண்டனைக்கு உட்படுத்தலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, அவர் செய்த குற்றம், அவரது பெயர் உள்ளிட்ட எந்த தகவலையும் சிறை நிர்வாகம் வெளியிட மறுத்துள்ளது.