மாயமான தாயார் மற்றும் பிஞ்சு குழந்தை தொடர்பில் மர்மம் விலகியது!

கனடாவில் மாயமானதாக கருதப்பட்ட இளம் தாயாரும் அவரது பிஞ்சு குழந்தையும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த தகவலை கால்கரி பொலிசார் உறுதி செய்துள்ளனர். நகரத்தில் இருந்து 50 கி.மீ தொலைவில், மரங்கள் அடர்ந்த பகுதியில் இருவரது சடலங்களும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சுமார் 50 பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட சிறப்பு குழுவினர் கடந்த பல நாட்களாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பில் ஏற்கெனவே கைதாகி பிணையில் வெளிவந்த பிரித்தானிய இளைஞரை பொலிசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.

தாயாரும் மகளும் மரணமடைந்த காரணம் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும், பின்னர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் எனவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 16 ஆம் திகதி முதல் 25 வயதான ஜாஸ்மின் லொவட் மற்றும் அவரது 22 மாத குழந்தை அலியா சாண்டர்சன் ஆகிய இருவரும் மாயமானதாக தெரியவந்தது.

தொடர்ந்து 23 ஆம் திகதி இந்த விவகாரம் தொடர்பில் உறவினர்கள் அளித்த புகாரின்பேரில் பொலிசார் வழக்குப் பதிவு செய்து,

25 ஆம் திகதி இது கொலையாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்து, பொலிசார் தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தினர்.

இந்த விவகாரத்தில் 34 வயது ராபர்ட் லேமிங் என்ற பிரித்தானியரை சந்தேகத்தின் அடிப்படையில் கனேடிய பொலிசார் கைது செய்து பின்னர் பிணையில் விடுவித்தனர்.

மாயமான ஜாஸ்மின் பிரித்தானியரான லேமிங் உடன் ஒரே குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். ஆனால் லேமிங் இந்த விவகாரத்தில் தமக்கு எந்த தொடர்பும் இல்லை என உறுதிபட தெரிவித்து வந்துள்ளார்.

மட்டுமின்றி, ஜாஸ்மின் தமது காதலி என்றும், அவரை கொலை செய்யும் நோக்கம் தமக்கு இல்லை எனவும் உறுதிபட தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தாயார் மற்றும் அவரது 22 மாத பிள்ளையை கொலை செய்து சடலத்தை எரித்து சாட்சியங்களை அழித்திருக்கலாம் என பொலிசார் லேமிங் மீது சந்தேகம் எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.