இஸ்லாமிய அரசின் அல் ஃ புர்கான் ஊடக வலையமைப்பினால் அண்மையில் வெளியிடப்பட்ட வீடியோ உண்மையானதாக இருந்தால், ( போலியல்லாதது என்பதற்கான சுயாதீன உறுதிப்படுத்தல் எதிர்பார்க்கப்படுகிறது) அந்த இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி உயிருடன் ஆரோக்கியமாக இருக்கிறார்.
சிரியாவுக்கும்,ஈராக்கிற்கும் இடைப்பட்ட பிராந்தியத்தில் தனது ‘ இராச்சியத்தின் ‘ தோற்றத்தை ஈராக்கின் மொசூல் நகரின் அல் நூரி பெரிய பள்ளிவாசலில் இருந்து 2014 ஆம் ஆண்டு அறிவித்தபோதே அவர் இறுதியாக வீடியோவில் தோன்றினார்.
அதற்கு பிறகு ஐந்து வருடங்களாக இஸ்லாமிய அரசு அல் பக்தாதியைக் காண்பிக்கும் பிரசார வீடியோ எதையும் வெளியிடவில்லை.அதனால் அவர் விமானக்குண்டுவீச்சு தாக்குதல் ஒன்றில் இறந்திருக்கக்கூடும் என்று ஊகம் கிளம்பியது.
உலகில் மிகவும் தேடப்படும் முக்கியமான பயங்கரவாதியான அவர் விமானக்குண்டுவீச்சு தாக்குதல்களில் இறந்துவிட்டதாக 2016ஆம் ஆண்டில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால், அல் பக்தாதியின் உரைகள் அடங்கிய வீடியோ துண்டுகள் இடைக்கிடை வெளியிடப்பட்டுவந்தன– ஆகப்பிந்திய துண்டு 2018 ஆகஸ்டில் வெளிவந்தது. சில காரணங்களுக்காக தங்கள் தலைவரை உலகம் பார்ப்பதை இஸ்லாமிய அரசு இயக்கத்தவர்கள் விரும்பவில்லைப் போலும் என்று அப்போது கருதப்பட்டது.
தலைக்கு 2 கோடி 50 இலட்சம் டொலர்கள் விலைபேசப்பட்டிருக்கும் அவர் பாரதூரமாக காயமடைந்தாரா அல்லது சுகவீனமுற்றிருந்தாரா?
இறுதியாக கடந்தவாரம் வெளியானது ஐந்து வருடங்களில் முதன்முறையாக வந்த வீடியோவாகும்.இறுதியாக இஸ்லாமிய அரசின் வசமிருந்து கடந்தமாதம் வீழ்ச்சியடைந்த பாக்ஹவுஸ் பகுதி உட்பட அதன் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பிராந்தியங்கள் மீது ஐந்து வருடங்களாக பொழிந்த குண்டு மழையில் இருந்து அவர் உயிர்தப்பியருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது.
பாக்ஹவுஸ் பகுதியில் இஸ்லாமிய அரசின் தோல்வியை அல் பக்தாதி வீடியோ பதிவில் ஒத்துக்கொள்கிறார். அந்த சண்டைக்குப் பிறகு மேலும் பல சண்டைகள் வரவிருப்பதாக எச்சரிக்கை செய்திருக்கும் அவர் இறுதிச் சமர்க்களத்தில் பலியான இஸ்லாமிய அரசின் போராளிகளுக்காக பழிதீர்க்கப்போவதாக சூளுதை்திருக்கிறார்.
இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை நடத்திய தற்கொலைக்குண்டுதாரிகளை புகழ்ந்த அவர் பாக்ஹவுஸை பாதுகாக்கப் போராடியபோது கொல்லப்பட்ட தங்களது போராளிகளுக்காக பழிவாங்குவதற்கு நடத்தப்பட்டவையே இலங்கை குண்டுத்தாக்குதல்கள் என்று வர்ணித்ததையும் வீடியோவில் காணக்கூடியதாக இருந்தது.
இலங்கை பற்றி பேசும்போது அல் பக்தாதியின் உருவம் வீடியோவில் மறைந்துபோகிறது. அதனால் வீடியோ பதிவு செய்ப்பட்ட பின்னரே இலங்கை பற்றிய குரல்பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்றே தோன்றுகிறது.
இந்த வீடியோ இஸ்லாமிய அரசு இயக்கத்தின் தலைவர் உயிர்தப்பியிருக்கிறார் என்பதை மாத்திரமல்ல, ஆரோக்கியமாக சுறுசுறுப்பாக இருக்கிறார் என்பதையும் வெளிக்காட்டுகிறது. மார்ச் மாதம் இஸ்லாமிய அரசின் தோல்வியைத் தொடர்ந்து போர் முடிவடைந்துவிட்டது என்று ட்ரம்ப் நிருவாகம் வீறாப்புப் பேசியது.ஆனால், இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் போர் முடிந்துவிடவில்லை என்பதை காட்டிநிற்கின்றன.
ஆக போர் புதியதொரு வடிவத்தையே எடுத்திருக்கிறது.ஒரு சமரில் தோற்றுப்போனதை இஸ்லாமிய அரசு ஒத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், வீடியோவில் அல் பக்தாதி நினைவுபடுத்துவதைப் போன்று போர் முடிந்துவிடவில்லை.
இந்தியா உட்பட தெற்காசியாவுக்குள் இஸ்லாமிய அரசு இயக்கம் முக்கியமான ஊடுருவல்களைச் செய்திருக்கிறது. அதன் தந்திரோபாயம் மாற்றமடைந்திருக்கும் நிலையில், அதுவும் குறிப்பாக இலங்கையில் தற்கொலைக்குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதன் பின்புலத்தில் ‘உறங்கிக்கொண்டிருக்கும் ‘ இஸ்லாமிய அரசின் தாக்குதல் பிரிவுகள் செயலில் இறக்கப்படக்கூடிய சாத்தியப்பாடுகள் குறித்து இந்தியா விழிப்படையவேணாடும்.
இலங்கையில் இஸ்லாமிய அரசும் அதன் உள்நாட்டுத் தொடர்பாளர்களும் மென்மையான இலக்குகளையே தாக்கியிருக்கிறார்கள்.அதேபோன்று இந்தியாவிலும் மென்மையான இலக்குகள் குறிவைக்கப்படக்கூடிய ஆபத்தை நிராகரிப்பதற்கில்லை.இந்திய உஷார்நிலையில் இருக்கவேண்டும்.
( டெக்கான் ஹெரால்ட் ஆசிரியதலையங்கம், 5 மே 2019)