மனிதத் தன்மையற்ற கொடூரர்கள்: பெற்றோரை இழந்த இளம்பெண்ணின் கண்ணீர்

ஈஸ்டர் நாளில் தீவிரவாதிகள் முன்னெடுத்த வெடிகுண்டு தாக்குதலில் பெற்றோரை இழந்த இளம்பெண் ஒருவர் தமது நிலையை பகிர்ந்துள்ளார்.

நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த 21 வயதான தெரஞ்சலி பெர்னாண்டோ என்பவரே தமக்கு ஏற்பட்ட சோக நிகழ்வை தற்போது பகிர்ந்துகொண்டுள்ளார்.

இலங்கையில் ஐ.எஸ் ஆதரவு தீவிரவாதிகள் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் முன்னெடுக்கும்போது தெரஞ்சலி பெர்னாண்டோ சீனாவில் மருத்துவம் பயின்று வந்துள்ளார்.

அவரது நண்பர்களே அந்த கொடூர தகவலை அவருக்கு பகிர்ந்துள்ளனர். ஆனால் இதுவெறும் புரளி எனவும், தம்மை கிண்டல் செய்ய நண்பர்கள் முயல்வதாகவும் அவர் எண்ணியுள்ளார்.

அதுவும் தேவாலயங்களை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் முன்னெடுக்கப்படுவது என்பதை இலங்கையில் போர் காலகட்டத்தில் கூட கேள்விப்படாத ஒன்று.

அந்த தகவலை உறவினர்களிடம் இருந்து உறுதி செய்த பின்னர் அப்படியே ஒருகணம் உறைந்துபோனதாக கூறும் தெரஞ்சலி பெர்னாண்டோ,

உடனடியாக இலங்கை திரும்ப அவரது உறவினர் கோரிக்கை விடுத்ததாகவும், குறித்த தாக்குதலில் சிக்கிய தமது பெற்றோர் படுகாயங்களுடன் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர் என்றார்.

ஆனால் இலங்கை வந்து சேர்ந்தபின்னர் தான் தெரியவந்தது, தமது பெற்றோர் அந்த வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டனர் என்று.

தெரஞ்சலியின் தந்தை சனத் ரோஹன் பெர்னாண்டோவும் பிரபலமான மருத்துவர். தமது சமூகத்திற்கு தொண்டாற்றுவதைவிட வெளிநாட்டு பணம் புகழ் எதுவும் ஈடாகாது என குறிக்கோளுடன் சொந்த நாட்டில் மருத்துவப் பணியாற்றியவர் என தந்தை குறித்து தெரஞ்சலி நினைவு கூர்ந்துள்ளார்.

வாழ்க்கையில் தாம் விரும்பிய அனைத்தையும் நிறைவேற்றித் தந்தவர்கள் தமது பெற்றோர், ஆனால் அவர்கள் இருவரும் தற்போது இல்லை என்பதை கற்பனையிலும் நினைக்க முடியவில்லை என கூறும் தெரஞ்சலி, மனிதத் தன்மையற்ற கொடூரர்களால் மட்டுமே ஈவு இரக்கமற்ற தாக்குதல்களை முன்னெடுக்க முடியும் எனவும் கண்கலங்கியுள்ளார்.