விளையாடும் போது ஆணியை விழுங்கிய 5 வயது சிறுவன்…

தமிழகத்தில் இரும்பு ஆணியை விழுங்கிய 5 வயது சிறுவனுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

ஓசூர் அருகே உள்ள போடிச்சிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளியின் மகன் விஸ்வநாத் (5). விஸ்வநாத் வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த போது ஆணியை விழுங்கியுள்ளான்.

இதனைத் தொடர்ந்து உடனடியாக சிறுவனை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர்.

ஆனால் மருத்துவர்களால் ஆணியை எடுக்க முடியவில்லை. இதனையடுத்து மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் உடனடியாக ஓசூர் அரசு மருத்துவமனையில் சிறுவனை பெற்றோர்கள் அனுமதித்தனர்.

அங்கு அவனுக்கு எக்ஸ்ரே எடுத்து பரிசோதிக்கப்பட்ட போது விஸ்வநாத் விழுங்கிய ஆணி அவனது வயிற்றுப் பகுதியில் சிக்கி கொண்டதை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, கிருஷ்ணகிரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிறுவனை மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர்.

மருத்துவர்கள் விஸ்வநாத்தின் வயிற்றில் இருந்து ஆணியை எடுக்க சிரமப்பட்டு வருவதால் அவன் பெற்றோர் சோகத்திலும், கலக்கத்திலும் உள்ளனர்.