குவைத் விமானநிலையத்தில் விமானத்தின் சக்கரத்தில் சிக்கி இந்தியர் ஒருவர் பலியான சம்பவம் அங்கு சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மரணமடைந்த நபர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆனந்த் ராமச்சந்திரன் என தெரியவந்துள்ளது. குவைத் ஏர்வேஸின் தொழில்நுட்ப பிரிவில் இவர் பணியாற்றிவருகிறார். இந்தச் சம்பவம் குவைத் சர்வதேச விமானநிலையத்தில் நிகழ்ந்துள்ளது.
சம்பவத்தின்போது விமானம் காலியாக இருந்துள்ளது. விமான நிலையத்தின் 4 ஆம் முனையத்திலிருந்து விமானத்தை அதன் நிறுத்துமிடத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
அப்போது விமானத்துக்கு அருகில் நின்று கொண்டு அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஆனந்த் விமானத்தின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக பலியானதாக குவைத் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.
இவரது உடல் புதன் கிழமை அவரது சொந்த ஊருக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பில் தேவையான விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஆனந்த் குவைத் ஏர்வேஸில் 2009 முதல் பணியாற்றி வருகிறார் என கூறப்படுகிறது.
இச் சம்பவம் ஆனந்த் ராமச்சந்திரனின் நெருங்கிய உறவினர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.