அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கணவன் தமது மனைவியை எச்சரித்து விட்டு சொந்த மகளை உயிருடன் எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க்கின் குயின்ஸ் பகுதியில் திங்களன்று இந்த நடுங்க வைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் பேசிய கொல்லப்பட்ட 3 வயது சிறுமியின் தாயார், அந்த நபர் தம்மை காயப்படுத்துவார் என்றே கருதியதாகவும், ஆனால் பிஞ்சு குழந்தையை இவ்வாறு கொடூரமாக கொலை செய்வார் என நினைக்கவில்லை என கண்ணீர்மல்க கூறியுள்ளார்.
குயின்ஸ் பகுதியில் குடியிருந்து வருபவர்கள் மார்டின் பெரேரா மற்றும் சேரான் கோல்மேன் தம்பதி.
இவர்களுக்கு ஸோய் பெரேரா என்ற 3 வயது மகள் உள்ளார். தற்போது பிரிந்து வாழும் இந்த தம்பதி தங்களது மகள் யாருடன் வாழ வேண்டும் என்பதிலேயே போராடி வந்துள்ளனர்.
இந்த நிலையில், சம்பவத்தன்று கோல்மேனை தொடர்பு கொண்ட பெரேரா, உனது மகளை இனிமேல் நீ பார்க்கவே முடியாது என கொக்கரித்துள்ளார்.
இதன் பின்னரே பெரேராவுக்கு சொந்தமான ஆடி A6 காரில் இருந்து கருகிய நிலையில் சிறுமி ஸோய் உடலை பொலிசார் மீட்டுள்ளனர்.
கடந்த சில வாரங்களாகவே தமக்கும் கணவருக்கும் இடையே தங்களது மகள் தொடர்பில் சட்டப்போராட்டம் நீடித்து வந்ததாகவும்,
தமது மகளை அவர் சந்திக்கும் தருணங்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை தேடி வந்ததாகவும், ஆனால் நீதிமன்றம் ஒப்புக்கொள்ள மறுத்ததாகவும் கோல்மேன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து வார இறுதி நாட்களின் சிறுமியை சந்திக்கும் வாய்ப்பு பெரேராவுக்கு வழங்கப்பட்டது.
நீதிமன்றத்தின் தீர்ப்பை தாம் மறுத்திருந்தால் தற்போது தமது மகள் உயிருடன் இருந்திருப்பார் என கண் கலங்கியுள்ளார்.
இதனால் தாம் சிறைக்கு செல்ல நேர்ந்தாலும், தமது மகள் உயிருடன் இருந்திருப்பார் என்றார் கோல்மேன்.
இந்த விவகாரம் தொடர்பில் தற்போது பொலிசார் பெரேராவை கைது செய்துள்ளனர். சொந்த குழந்தையை காருடன் நெருப்பு வைத்து கொளுத்தியபோது, அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், சிகிச்சைக்கு பின்னரே அவரிடம் பொலிசார் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.