மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் தனது மகள் வேறு சமூகத்தை சேர்ந்த நபரை திருமணம் செய்து கொண்ட காரணத்தால் கோபம் கொண்ட தந்தை அவரை உயிருடன் எரித்துக்கொலை செய்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ருக்மணியும் மங்கேஷ் ரான்சிங்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.
மங்கேஷ் குடும்பத்தினர் இந்த திருமணத்தை ஏற்றுக்கொண்டனர். ஆனால் ருக்மணி குடும்பத்தினருக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. புதுமணதம்பதியினரை அவ்வப்போது மிரட்டி வந்துள்ளனர்.
இந்நிலையில், ருக்மணியின் பெற்றோர் அவரை ஏப்ரல் 30-ம் தேதி தங்கள் வீட்டுக்கு அழைத்துள்ளனர், தனது பெற்றோரின் அழைப்பை ஏற்று சென்ற ருக்மணியை அவரது பெற்றோர் கொடுமையாக அடித்துள்ளனர்.
இதனால் தனது கணவருக்கு போன் செய்து தன்னை வந்து அழைத்து செல்லுமாறு ருக்மணி கூறியுள்ளார். இதனால் மே 1 ஆம் திகதி மங்கேஷ், ருக்மணியின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
ருக்மணியின் சித்தப்பாவும், மாமா உட்பட தந்தை ஆகியோர் ஒன்று சேர்ந்து ருக்மணி – மங்கேஷ் இருவரையும் அவர்கள் தாக்கினர். இருவரையும் கட்டிவைத்து அவர்கள் மீது பெட்ரோல் ஊற்றித் தீவைத்தனர். புதுமணத் தம்பதியான அவர்கள் இருவரும் உயிரோடு எரிந்துகொண்டிருந்தபோது அவர்கள் அனைவரும் கதவை சாத்திவிட்டு வெளியில் காத்திருந்தனர்.
இவர்களின் அலறல் சத்தம் கேட்ட அருகில் இருப்பவர்கள் விரைந்து வந்து ருக்மணி – மங்கேஷ் இருவரையும் புனே சசூன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
60-65 சதவீதம் தீக்காயம் அடைந்திருந்த ருக்மணி மே 5-ம் தேதி உயிரிழந்தார்.
40-45 சதவீதம் தீக்காயம் அடைந்த மங்கேஷ் நிலையும் கவலைக்கிடமாகவே உள்ளது. இருவரும் எரிக்கப்பட்ட இடத்தில் இருந்து பெட்ரோல் பாட்டில் உள்ளிட்ட சில பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விசாரணை நடந்துவருகிறது என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ருக்மணியின் பெற்றோர் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார்கள் என பொலிசாரிடம் புகார் தெரிவித்தும் அவர்கள் அலட்சியம் காட்டினர் என மைத்துனர் மகேஷ் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக, ருக்மணியின் மாமா கணஷியாம் மற்றும் சித்தப்பா சுரேந்திர பாபுலால்பாரதி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ருக்மணியின் தந்தை ராம ராம்பால் பாரதியா தேடப்பட்டு வருகிறார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.