சைக்கிள் சக்கரத்தை தலையில் சுழலவிட்டு 56 நொடிகளில் 100 படிகளேறி சாதனை படைத்த மாணவர், ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மீண்டும் அந்த சாதனையை நிகழ்த்திக் காட்டினார்.
தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷேக்முகமது ரசீத் (19). இவர், கீழக்கரை முகமது சதக் கலை அறிவியல் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு தொழில்நுட்பவியல் படித்து வருகிறார்.
சிறு வயது முதலே, ‘ஏதாவது சாதனை படைக்க வேண்டும்’ என்று ஆர்வம் கொண்டிருந்த இவர் கடந்த ஆண்டு, தன் தலையில் சைக்கிள் சக்கரத்தை சுழல விட்டபடி ஒரு நிமிடத்தில் 100 படிகளேறி சாதனை படைத்தார்.
இதன் மூலம், முகவை சாதனை புத்தகம் மற்றும் மாநில வில் சாதனை புத்தகம் ஆகியவற்றில் இடம் பிடித்தார். இந்நிலையில் இவர், தனது சாதனையை தானே முறியடிக்கும் வகையில், கீழக்கரை கல்லூரியில் உள்ள 100 படிகளை தன் தலையில் சைக்கிள் சக்கரத்தை சுழல விட்டபடி 56 நொடிகளில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
வில் சாதனை புத்தக குழுமங்களின் நிறுவனர் கலைவாணி, கல்லூரி முதல்வர் ரஜபுதீன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் இந்த சாதனையை அவர் நிகழ்த்திக் காட்டினார்.
ஷேக்முகமது ரசீத்தின் இந்த சாதனை அங்கீகரிக்கப்பட்டு, வில் மெடல் இந்திய சாதனை பட்டியலிலும், வில் மெடல் உலக சாதனை பட்டியலிலும் இடம் பிடித்துள்ளது.
இதற்கான சான்றிதழை பெற்றுக்கொண்ட மாணவர் ஷேக்முகமது ரசீத், கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தனது சாதனையை மீண்டும் நிகழ்த்திக் காட்டினார். அப்போது பேசிய அவர், “மாசு இல்லாத உலகை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் மோட்டார் வாகனங்களுக்கு பதிலாக மீண்டும் சைக்கிள் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி இந்த சாதனையை புரிந்தேன்” என தெரிவித்தார்.