‘திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கழக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினருமான “கோவைத் தென்றல்” திரு மு. இராமநாதன் அவர்களின் மறைவையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி’
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கழக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினருமான “கோவைத் தென்றல்” திரு மு. இராமநாதன் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற அதிர்ச்சிச் செய்தி கேட்டு துடி துடித்துப் போனேன். துயரம் என்ற மகாசமுத்திரத்தில் திசை காண முடியாமல் மூழ்கியிருக்கிறேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திராவிட இயக்கத்தின் முன்னனித் தலைவர்களில் ஒருவரான திரு மு.ராமநாதன் அவர்கள் 70 ஆண்டு காலம் கழகத்திற்காக உழைத்தவர். கோவை மாநகர செயலாளராகவும், தணிக்கைக்குழு உறுப்பினராகவும், சட்டத்திட்ட திருத்தக்குழு உறுப்பினராகவும், உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினராகவும் கழகப் பணியாற்றியவர். கோவை நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் மக்களுக்கு அரும் பணியாற்றியவர். கழக ஆட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை கோவைக்குக் கொண்டு வரக் காரணமாக இருந்தவர்.
கழகப் பணியாற்றுவதில் அவருக்கு நிகர் அவரே என்ற அளவில் பம்பரமாகச் சுழன்று பாசத்துடன் பக்குவமாகத் தொண்டர்களை ஆதரித்து அரவணைத்துச் சென்றவர். கழகம் நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டம் தொட்டு மிசா சிறைவாசம் என அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு, மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை என்று, சிறை ஏகியவர்.
பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோர் மீது அளவுகடந்த பற்றும் பாசமும் வைத்திருந்தவர் அவர். அவர்களின் மனமுவந்த பாராட்டுகளைப் பெற்றவர் அவர்.இந்த இயக்கத்தின் என்றும் தளர்ச்சியடையாத உயிரோட்டம் மிக்க ரத்த நாளமாகத் திகழ்ந்து- எண்ணற்ற கொள்கை வீரர்களையும்- இலட்சிய வேங்கைகளையும் கொங்கு மண்டலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அசையாச் சொத்துக்களாக உருவாக்கியவர். 1992ல் கழகத்தின் சார்பில் “அண்ணா விருது” வழங்கி பெருமை சேர்க்கப்பட்டது.
நான் கோவை வரும் போதெல்லாம் இன்முகத்துடன் வரவேற்கும் அவரை அண்மைக் கால கழக நிகழ்ச்சிகளில் நேரில் காண முடியாமல் தவித்திருக்கிறேன். ஆனால் கோவை செல்லும் சமயங்களில் எல்லாம் நேரில் சென்று உடல் நலம் விசாரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். சமீபத்தில் கோவை சென்ற நேரத்தில் நான் அவரது இல்லத்திற்கே சென்று அவரது இன்முக வரவேற்பைப் பெற்றேன். அவர் உடல் நலம் விசாரித்த போது, தன் உடல்நலம் குன்றியிருந்தது பற்றி சிறிதும் கவலைப்படாமல் என் மீது அவர் கோடை மழை போல் பாசத்தைப் பொழிந்தார். அந்தப் பாசமழையின் ஈரம் காய்வதற்குள் இன்று அவரைப் பறிகொடுத்து, பரிதவித்து நிற்கிறேன்.
திராவிட இயக்கத்தின் பயிற்சிப் பாசறைகளில் அவர் குறைந்தது 4 முதல் 5 மணி நேரம் திராவிட இயக்கத்தின் இலட்சியங்கள் பற்றி உணர்ச்சி பொங்க உரையாற்றும் ஆற்றல் படைத்தவர். “திராவிட இயக்கத்தின் வாரியார்” என்று போற்றும் அளவுக்கு, கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேட்ப மொழியும் சொல்லேருழவர் அவர். இயக்கத்தின் அத்தனை அசைவுகளையும் விரல் நுனியில் வைத்துக் கொண்டு தன் மேடைப் பேச்சுக்களில் மடைதிறந்த வெள்ளமென அள்ளித் தெளிக்கும் அவருடைய ஆற்றல் மிகு உரைகளை கழகப் பொதுக்கூட்டங்களிலும், கழக மாநாடுகளிலும் கேட்டு அனைவரையும் போல நானும் வியந்து போயிருக்கிறேன். திராவிட இயக்கத்தின் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்த அவரது மறைவு அவரது உறவினர்களுக்கு மட்டுமல்ல- எனக்கும்- இந்த இயக்கத்தின் கோடானு கோடி தொண்டர்களுக்கும், கொங்கு மண்டல மக்களுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும் “திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் திரு. கோவை மு.இராமநாதன் அவர்கள் மறைவையொட்டி இன்றுமுதல் மூன்று நாட்களுக்கு கழக கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறும், கழக நிகழ்ச்சிகளை மூன்று நாட்களுக்கு ஒத்தி வைக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்” என திமுக தலைமை அறிவித்துள்ளது.