இலங்கை தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள்…!! நட்சத்திர ஹோட்டல்களில் நடந்த விபரீதம் என்ன?

கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களுக்ளுக்கு ஐ.எஸ் பயங்கரவாதிகள் எவ்வாறு தாக்குதல் நடத்தினர் என குற்ற புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பயங்கரவாதிகளின் தாக்குதல் தொடர்பில் கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்கவிடம், குற்ற புலனாய்வு அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

அதிக வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து ஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இரண்டு குண்டுதாரிகள் குண்டுகளை வெடிக்க செய்து உயிரிழப்புக்களை ஏற்படுத்தியுள்ளனர்.முதல் குண்டை பிரதான சூத்திரதாரி சஹரான் ஹாசீமே வெடிக்கச் செய்துள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. முதல் குண்டு 8.54 மணிக்கு டேபிள் வன் எனும் உணவகத்தில் வெடித்துள்ளது.இரண்டாம் குண்டு ஹோட்டலின் மூன்றாம் மாடியின் மின் தூக்கி மற்றும் படிகள் அமைந்துள்ள வெளியேறல் பிரிவில் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.

ஷங்கீரிலா ஹோட்டலில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் 12 இலங்கையர்கள், 24 வெளிநாட்டவர்கள் என 36 பேர் கொல்லப்பட்டனர். வெளிநாட்டவர்கள் உட்பட 33 பேர் காயம் அடைந்தனர்.சஹ்ரான் மற்றும் இல்ஹாம் தற்கொலை தாக்குதலை நடத்தியுள்ளனர். இருவரின் தலைப் பகுதிகள் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த உடற்பாகங்களை கொண்டு DNA பரிசோதனைகளை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதன்படி சஹ்ரானின் தங்கையான மொஹம்மட் ஹாசிம் பாத்திமா மதனியாவிடம் இரத்த மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளனன.தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவராக அடையாளம் காணப்பட்ட மொஹம்மட் இப்ராஹீம் இல்ஹாம் அஹமட்டின் தந்தையான மொஹம்மட் இப்ராஹீம் மற்றும் அவரது தாயாரான கதீஜா உம்மா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பெற்றோர் ஊடாகவும் இல்ஹாமின் சகோதரர்கள் ஊடாகவும் அங்கு இரண்டாவது குண்டை வெடிக்கச் செய்தவர் இல்ஹாம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஷங்ரில்லா ஹோட்டலில் கடந்த ஏப்ரல் 17ஆம் திகதி மொஹமட் எனும் பெயரில் அறை ஒன்றினை பதிவு செய்த நபர், உயிர்த்த ஞாயிறன்று சினமன் கிரேண்ட் ஹோட்டலில் தற்கொலை தாக்குதலை நடத்திய மொஹம்மட் இப்ராஹீம் இன்ஷாப் அஹமட் என்பவரென அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.