தனிமையில் விடப்பட்ட சிறுவன் ஒருவன் போலீஸ் அவரச எண்ணிற்குத் தொடர்பு கொண்டு என்னுடன் நண்பனாக இருக்க முடியுமா என்று கேட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் டல்லஹாசி போலீசாரின் அவசர எண்ணிற்கு தொலைப்பேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் எதிர்முனையில் பேசிய சிறுவன் ஒருவன், நான் தனிமையில் விடப்பட்டுள்ளேன்.
எனக்கு நண்பராக இருப்பீர்களா? என்று கேட்டுள்ளான். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக அந்த சிறுவனின் வீட்டிற்கு பொம்மையுடன் வந்து குறித்த சிறுவனை சந்தித்துப் பேசியதுடன் பொலிஸ் வாகனத்தில் ஒரு ரவுண்டு அடித்து சிறுவனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். மேலும் அவசர எண் என்றால் என்ன? அவற்றின் பயன்பாடு என்ன என்பது குறித்தும் விளக்கமளித்துள்ளனர்.
சிறுவனை சந்தித்த டல்லஹாசி போலீசார் ஒருவர், ‘எங்களுக்கு புதிய நண்பன் கிடைத்துள்ளார்’ என்று பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வேகமாக சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகில் மனிதர்களும் காலத்திற்கேற்றார் போல ஓடி கொண்டிருக்கின்றனர். பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி ஓடும் இவர்கள் பயணத்தில் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்குவது, பிள்ளைகளுக்கு ஆறுதலாக இருப்பது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் இல்லாமல் மறைந்து போய் விடுகிறது. அப்படி தனிமையில் வாடும் பல குழந்தைகளின் குமுறலைத் தான் இந்த 6 வயது சிறுவன் வெளிப்படுத்தியுள்ளான்.