இஸ்லாமிய தீவிரவாதிகள் மேலும் தாக்குதல்களை மேற்கொள்ளும் ஆபத்தை படையினர் கட்டுப்படுத்தியுள்ளதுடன் அவர்களின் வலையமைப்புகளை அழித்துள்ளனர் என இலங்கை இராணுவதளபதி மகேஸ்சேனநாயக்க ரொய்ட்டரிற்கு தெரிவித்துள்ளார்.
விசாரணைகளின் போது ஐஎஸ் அமைப்புடன் உள்ள தொடர்புகள் தெரியவந்துள்ளன எனினும் எவ்வாறு இந்த தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டன என்பதை விசாரித்து வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
பாதுகாப்பு நிலைமை குறித்து நாங்கள் கவலையடையவேண்டியதில்லை அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளோம் விரைவில் இயல்பு நிலைமை திரும்பிவிடும் என நம்புகின்றோம் என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்
சர்வதேச தொடர்புகள் உள்ளன ,நாங்கள் இது குறித்து விசாரணை செய்து வருகின்றோம் என தெரிவித்துள்ள மகேஸ் சேனநாயக்க நிச்சயமாக ஐஎஸ் தொடர்புள்ளது ஆனால் ஐஎஸ் அமைப்பிற்கு நேரடி தொடர்புள்ளது என்பது இதன் அர்த்தமல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த தொடர்புகள் எவ்வளவு ஆழமானவை என்பதை கண்டுபிடிக்க முயல்கின்றோம் அவ்வாறு கண்டுபிடித்தாலே எங்கள் நடவடிக்கைகளை திட்டமிட முடியும் எனவும் இலங்கை இராணுவதளபதி தெரிவித்துள்ளார்
தாக்குதல்கள் எவ்வாறு திட்டமிடப்பட்டன,நிதி எவ்வாறு கிடைத்தன என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றோம் என தெரிவித்துள்ள இராணுவதளபதி வெளிநாட்டு தொடர்புகள்குறித்து ஆராய்ந்து வருகின்றோம் தமிழ்நாட்டிலிருந்து வெடிபொருட்கள் வந்தனவா என்பதையும் ஆராய்ந்து வருகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.
குண்டுதாக்குதல்களிற்கு ஜஹ்ரானே தலைமை தாங்கினார் அதனை வழிநடத்தினார் என்பது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாகவும் இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.
ஜஹ்ரானே குண்டுதாக்குதல்களிற்கு தலைமை தாங்கி வழிநடத்தினார் என்பதே இதுவரையில் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் தீவிரவாத கொள்கை மற்றும் தலைமைத்துவத்துடன் வேறு முக்கியமானவர்களும் தொடர்புபட்டிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.