வெளிநாட்டில் தனிமையில் அக்கா! குண்டுத்தாக்குதலில் பெற்றோரை இழந்து தவிக்கும் தம்பி

கடந்த மாதம் மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பிள்ளைகள் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

உயிரிழந்த தம்பதியின் 19 வயதான ஜீவனா திருகேஸ்வரன் என்ற மூத்த மகள் அவுஸ்திரேலியா கல்வி கற்று வருகிறார்.

எனினும் உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் அவரின் 15 வயதான சகோதரன் சுஷான் மாத்திரமே குடும்பத்தில் உயிர் தப்பியுள்ளார்.

சகோதரன் மட்டக்களப்பு மெதடிஸ் பாடசாலையில் கல்வி கற்று வருகிறார்.

கடந்த மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தேவாலய பூஜைக்காக இந்த பிள்ளைகளின் பெற்றோர் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு சென்றிருந்தனர்.

வேறு நாட்களில் பெற்றோருடனே தேவாலயத்திற்கு செல்லும் சுஷான் அன்றைய தினம் தனக்கு நித்திரையாக உள்ளதென கூறி தேவாலயத்திற்கு செல்லவில்லை.

எனினும் தேவாலயத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் தனது தாய் தந்தையை இழந்து விட்டதாக சுஷான் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை கேட்டதில் இருந்து மகள் ஜீவனா இன்னமும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. அவருக்கு அவுஸ்திரேலிய மக்கள் மிகப்பெரிய ஆறுதலாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

எப்படியாவது தனது தம்பியை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து வருமாறு கேட்டுக்கொண்டுள்ளார். தன்னால் தனது தம்பியை காப்பாற்ற முடியும் என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.