இந்தியாவில் முதன்முறையாக ஒரு மாகாணத்தை நிறுவியுள்ளதாக உலகையே உலுக்கி வரும் ஐ.எஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
சமீபத்தில், காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதுடன், ஐ.எஸ் குழுவிற்கு தொடர்பு இருப்பதாக ஷாஃபக் அகமது சோபி என்ற நபர் கொல்லப்பட்டார். இந்த நிலையில், காஷ்மீர் பகுதியில் கால்பதித்துள்ளதாக ஐ.எஸ் அறிவித்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்செய்தியை ஐ.எஸ்-யின் அதிகாரப்பூர்வமான அமாக் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அமாக் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள புதிய மாகாணம் “Wilayah of Hind” என்றழைக்கப்படும்.
மேலும், காஷ்மீரின் சோபியான் பகுதியில் ஐ.எஸ், இந்திய இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. புதிய மாகாணம் ஐ.எஸ் அமைப்பிற்கு வலுவூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் ஆயிரக்கணக்கான மைல் பகுதி ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ளது என கூறப்பட்டுள்ளது.
வெள்ளியன்று சோபியான் பகுதியில் ஷாஃபக் அகமது சோபி என்ற பிரிவினைவாதி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக இந்திய பொலிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையும், ஐ.எஸ் அறிக்கையும் பொருந்துவது குறிப்பிடத்தக்கது.
எனினும், காஷ்மீர் பகுதியில் ஐ.எஸ்-யுடன் தொடர்பில் இருந்த ஒரே ஒரு பிரிவினைவாதியான சோபியும் கொல்லப்பட்டதாக இந்திய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.