இந்தியாவில் திருமணநாளில் தந்தையின் ஆசையை மகள் நிறைவேற்றியுள்ள சம்பவம் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் குறிச்சித்தனம் பகுதியில் இருக்கும் ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி கோவிலில், மகிமா என்ற பெண்ணுக்கும் சுராஜ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
அப்போது மணப்பெண்ணான மகிமா முழு மேக்கப்புடன் ஆட்டோவில் வந்திறங்கினார். அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில் அது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கேரளா மாநிலம் உழவூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகனன் நாயர். இவர், 1995-ஆம் ஆண்டில் இருந்து அதே பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார்.
அப்போதிருந்தே இவருக்கு தன்னுடைய மகளின் திருமணத்தின் போது, மகளையும் மற்ற உறவினர்களையும் ஆட்டோவில் திருமண மண்டபத்துக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.
இதை அறிந்த மகிமா தன் தந்தையின் ஆசைப்படியே நிச்சயதார்த்த தினத்தன்று தோழிகளுடன் ஆட்டோவில் மண்டபம் வந்துள்ளார்.
அவர் வந்த ஆட்டோவை மகிமாவே ஓட்டியும் வந்துள்ளார். அதேபோல திருமண நாள் அன்றும் ஆட்டோ ஓட்டிக்கொண்டு கோவிலுக்கு சென்றுள்ளார்.
மகிமாவின் ஆட்டோ முன்னே செல்ல, அதனைப் பின் தொடர்ந்து சுமார் 20 ஆட்டோக்கள் ஊர்வலமாக வந்துள்ளன. மோகனன் தற்போது குடிசைத்தொழில் செய்துவருகிறார்.
அதனால், அவருக்கு ஆட்டோ ஓட்ட நேரம் கிடைப்பதில்லை என்பதால், அப்போதே தன் மகளுக்கு ஆட்டோ ஓட்ட கற்றுக்கொடுத்து, அவருக்கு லைசென்ஸும் வாங்கிக்கொடுத்துள்ளார்.
இந்தக் காலத்தில் திருமணத்துக்காகப் பல லட்சம் செலவுசெய்து, விலையுயர்ந்த காரில் செல்லும் மணமக்கள் மத்தியில், தந்தையின் ஆசைக்காகத் தானே ஆட்டோ ஓட்டிச் சென்ற மணப் பெண்ணின் புகைப்படம், சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன் பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.