நான் மீண்டும் ஜனாதிபதியானால் மிக மோசமாகிவிடும்! எச்சரிக்கை விடுத்த டிரம்ப்

வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டால் நல்லது, இல்லையென்றால் மிக மோசமாகி விடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா-சீனா நாடுகளுக்கிடையே வர்த்தகப்போர் நடந்து வருகிறது. இரு நாடுகளும் மாறி மாறி தங்கள் இறக்குமதிப் பொருட்களுக்கு வரிக்கட்டணங்களை உயர்த்தி வருவதால் பதற்றம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக உலகப் பொருளாதார சீரழிவு ஏற்படுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

இருநாடுகளுக்குமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மூத்த பிரமுகர் ஒருவர், இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தைகள் எந்த ஒரு ஒப்பந்தமும் இல்லாமல் முடிந்து போனது என்றும், மீண்டும் இருநாடுகளும் வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்காக சந்திக்கும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன் முக்கிய கொள்கைகளில் சீனா ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது என்றும் தெரிவித்தார். இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘சமீபத்திய பேச்சுவார்த்தைகளில் சீனா பெரிய அடி வாங்கியுள்ளது போல் தெரிகிறது.

அதனால் அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரை இழுத்தடிக்கலாம் என்று நினைக்கிறது. ஜனநாயகக் கட்சி வென்றால் தங்கள் அதிர்ஷ்டம் என்று நினைக்கின்றனர். அப்படியானால் அமெரிக்காவிடமிருந்து ஆண்டுக்கு 500 பில்லியன் டொலர்கள் வரை பெயர்ந்து எடுத்துச் செல்லலாம் அல்லவா?

ஆனால், அவர்கள் ஆசையில் விழப்போகும் மண் என்னவெனில், நான் மீண்டும் ஜனாதிபதியாகப் போகிறேன். அப்போது ஒப்பந்தம் இன்னும் மிக மிக மோசமாகப் போகிறது. இப்போதே ஒப்பந்தம் செய்தால் அவர்களுக்கு நல்லது. வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் தங்களின் வாக்குறுதிகளை சீனா காப்பாற்றவில்லை.

சீனாவுக்கு இறக்குமதியாகும் 200 பில்லியன் டொலர்கள் மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்களுக்கு கூடுதலாக வரி விதிக்கின்றனர், அதாவது 10 சதவிதம் முதல் 25 சதவிதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்தால் கூடுதல் கட்டணங்களை வர்த்தகர்கள் தவிர்க்க முடியும்’ என தெரிவித்துள்ளார்.