லாட்டரியில் £2.5 மில்லியன் பரிசு வென்று சொகுசாக வாழ்ந்த பெண்… கணவரின் செயலால் நேர்ந்த கதி…

பிரித்தானியாவில் லாட்டரியில் £2.5 மில்லியன் பரிசு வென்ற பெண்ணின் பெயரில் உள்ள சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அப்பெண்ணின் கணவர் பண மோசடியில் ஈடுபட்டது கண்டுப்பிடிக்கப்பட்ட நிலையிலே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமண்டா நுட்டல் (45) என்ற பெண்ணுக்கு தேசிய லாட்டரியில் 11 ஆண்டுகளுக்கு முன்னர் £2.5 மில்லியன் பரிசு விழுந்தது.

இதை வைத்து தனி விமானத்தில் பயணித்தது, துபாய் உள்ளிட்ட நாடுகளில் சுற்றுலா சென்றது போன்ற விடயங்களை அமண்டா செய்தார்.

இதோடு அமண்டாவும் அவரின் தொழிலதிபர் கணவருமான ஜோனாதனும் தங்கள் சொகுசு பங்களாவில் நீச்சல் குளம் கட்டினார்கள்.

இந்நிலையில் பொலிசார் கூறுகையில், ஜோனாதன் பணமோசடி செய்து அதிகளவில் பணம் சம்பாதித்ததோடு அந்த பணத்தை வைத்து தனது மனைவி பெயரில் சொத்துக்களை வாங்கியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக ஜோனாதன் மனைவி அமண்டா மீது எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என கூறியுள்ளனர்.

இதை தொடர்ந்து அமண்டா பெயரில் உள்ள அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அவரிடம் இருந்த பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தொகையின் அளவு குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.

ஜோனாதனுடன் சேர்ந்து பணமோசடியில் ஈடுபட்டதாக எரிக் குரோவ் (89) மற்றும் டிமோதி (55) ஆகியோரின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மொத்தமாக £6 மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றும் சட்டத்துக்கு புறம்பான செயல் போன்ற விடயங்களில் ஈடுபட்டதாக தேசிய குற்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.