லண்டனில் கொடூரமாக கொல்லப்பட்ட இந்தியர்: திடுக்கிடும் பின்னணி

லண்டனில் இந்தியர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட வழக்கில் பாகிஸ்தானை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தை சேர்ந்தவர் நடீம் உதின் ஹமீத் முகமது (24). இவர் லண்டனில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் மேலாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த 8ஆம் திகதி சூப்பர் மார்க்கெட்டின் பார்க்கிங் பகுதியில் ஹமீத் ரத்த வெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டார்.

பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இந்நிலையில் ஹமீதை மார்பு பகுதியில் கத்தியால் குத்தி கொலை செய்ததாக பாகிஸ்தானை சேர்ந்த அகூப் பெர்வைஸ் (26) என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அதாவது ஹமீத் மேலாளராக இருந்த சூப்பர் மார்க்கெட்டில் தான் அகூப்பும் வேலை செய்துள்ளார்.

அவர் சரியாக வேலை செய்யவில்லை என்பதால் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தான் அகூப், ஹமீத்தை பழிவாங்க கொலை செய்ததாக தெரியவந்துள்ளது.

இது குறித்து ஹைதராபாத்தில் உள்ள ஹமீத்தின் குடும்ப வழக்கறிஞர் குரேஷி கூறுகையில், ஹமீத் தனது பணியை நேர்மையாக செய்ததற்காக தனது உயிரையே இழந்துள்ளார்.

நேர்மையாக இருந்த ஹமீத்தை அவர் வேலை செய்த நிறுவனம் கெளரவிக்க வேண்டும் என கூறினார்.

இதனிடையில் அகூப்புக்கு ஹமீத் மற்றும் அவர் குடும்பத்தாருடன் ஏற்கனவே பழக்கம் இருந்தது தெரியவந்துள்ளது.

உயிரிழந்த ஹமீத்தின் மனைவி கர்ப்பமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.