கண் திருஷ்டியைப் போக்க சிறந்த வழி?

கல்லடி பட்டாலும் , கண்ணடி படக்கூடாது. இது நம்முன்னோர்களின் அனுபவ மொழி. கெட்ட எண்ணங்களின் தொடர்ச்சியான தாக்குதலே கண் திருஷ்டி.

இதற்கு கண்ணேறு என்றும் ஒரு பெயர் உண்டு. நாம் எதிர்பார்த்தது மற்றவர்களுக்கு கிடைக்கும்போது அதிக மனஉளைச்சல், ஆற்றாமை, பொறாமை உண்டாகி அது பொறுமலாக உருவெடுக்கிறது.

இந்த தீய எண்ணம் நம் கண்கள் மூலம் திருஷ்டியாக வெளிப்படுகிறது. எனவேதான் பெரியோர்கள் எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும் என்று சொன்னார்கள்.

  • எப்படிக் கண்டுபிடிப்பது?

நமக்கோ அல்லது நம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கோ திருஷ்டி தோஷங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை பல நிகழ்ச்சிகள் மூலமும், சில அறிகுறிகள் மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

திருஷ்டி, தோஷத்தால் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்னைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், கைப்பொருள் இழப்பு என வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கும்.

ஒரு சிக்கல் தீருவதற்குள் அடுத்த பிரச்னை காத்துக் கொண்டு இருக்கும். பெண்களுக்கு உடல் சோர்வு, மனச்சோர்வு, இல்லாத ஒன்றை கற்பனை செய்து பயப்படுதல், கணவன்-மனைவி இடையே காரணம் இல்லாத பிரச்னைகள், சந்தேகங்கள், உறவினர்களுடன் பகை, சுபநிகழ்ச்சிகளில் தடை, ஒருவர் மாற்றி ஒருவருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படுதல், சாப்பிட பிடிக்காமல் போவது, எல்லோரிடமும் எரிந்து விழுவது, கெட்ட கனவுகள், தூக்கமின்மை, அடிக்கடி கொட்டாவி விடுவது, எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவது போன்றவை உண்டாகும்.இதன்மூலம் கண் திருஷ்டி ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்துகொள்ளலாம்.

  • என்ன செய்யலாம்?

மீன் தொட்டி வைத்து அதில் கருப்பு, சிகப்பு மீன்களை வளர்க்கலாம். கண் திருஷ்டி கணபதி படம் வைக்கலாம். மிக மெல்லிய வாத்ய இசை, மந்திரங்களை ஒலிக்க விடலாம்.வாசலில் கற்றாழை, சப்பாத்தி கள்ளி, முள் அதிகம் உள்ள செடிகள், மஞ்சள் ரோஜா செடி ஆகியவற்றை வளர்க்கலாம். ஆகாச கருடன் என்று ஒரு வகை கிழங்கு உள்ளது. அதை வாங்கி மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து கருப்பு கம்பளி கயிற்றில் கட்டி வீட்டின் வாசலில் தொங்க விடலாம்.

  • உப்புக்குளியல்

வாரம் ஒருமுறை கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வர திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் நீங்கும். குறிப்பாக அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்க்கிழமையில் இவ்வாறு குளிக்கலாம்.

  • எலுமிச்சம்பழம்

வியாபாரத் தலங்களில் திருஷ்டி நீங்க எலுமிச்சம்பழத்தை அறுத்து ஒரு பகுதியில் குங்குமத்தை தடவியும், மற்றொரு பகுதியில் மஞ்சள் பொடியைத் தடவியும் வைக்கலாம்.

இதை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை செய்வது நலம் தரும். பழத்தை மாற்றும்போது முதலில் வைத்த பழத்தை மூன்று முறை கடையை சுற்றி தெருவில் வீசிவிடவும்.

  • கடல் நீர்

வளர்பிறையில் வரும் செவ்வாய், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்குச் சென்று கடல் நீரை எடுத்து வந்து அதில் மஞ்சள் பொடியை கலந்து கடை, அலுவலகம், வீடு ஆகியவற்றில் தெளிப்பது சிறந்த பரிகாரம்.

  • திதிகள்

அமாவாசை பவுர்ணமி அஷ்டமி நவமி போன்ற நாட்களில் காலை, மாலை இருவேளையும் சாம்பிராணி பொடியுடன், கருவேலம்பட்டை பொடி, வெண் கடுகுத்தூள் ஆகியவற்றை கலந்து வீடு, கடை அலுவலகத்தில் தூப, தீப, புகை காட்ட திருஷ்டியும், தீய சக்திகளும் வெளியேறும்.