வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்படும் இந்திய பெண்!

அரிதான நோயால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய இளம்பெண் பிரித்தானியாவில் இருந்து வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட உள்ளார்.

இந்தியாவை சேர்ந்த பவானி எஸ்பாதி (31) என்பவர் கடந்த 2010ம் ஆண்டு படிப்பிற்காக இங்கிலாந்து சென்றுள்ளார். ஆனால் விரைவில் வேலைக்கான விசாவை பெற்று கலைத் துறையில் பணிபுரிய துவங்கினார்.

கடந்த ஆண்டு அரிதாக வரும் குடல் ஆழற்சி நோயினால் பவானி பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பெரிய அறுவை சிகிச்சை முடிந்ததும் கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அந்த சமயத்தில், பவானி மேலும் பிரித்தானியாவில் தங்குவதற்கான விண்ணப்பத்தை வெளியுறவுத்துறை அதிகாரிகள் நிராகரித்திருந்தனர். மேலும், அவர் இந்தியாவிற்கு திரும்ப வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.

இந்த நோய்க்கான சிகிச்சை இந்தியாவில் கிடையாது என்றும், இந்த சமயத்தில் நாடு திரும்புவது தனக்கு சிரமானது என்றும் பவானி மீண்டும் விண்ணப்பித்துள்ளார்.

அடுத்த 2 மாதத்தில் அதனையும் நிராகரித்த அதிகாரிகள், இந்தியாவில் அதற்கான வசதிகள் இல்லை என்றாலும் கூட, பவானிக்கு ஆறுதலாக இருக்கும் எனக்கூறியுள்ளனர்

இந்த நிலையில் கடந்த மாதம் மீண்டும் பவானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சிகிச்சைக்காக இங்கிலாந்தில் இருப்பது முக்கியம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து குடிவரவு குடியுரிமைகளுக்கான கூட்டுக் குழுவில் சட்ட இயக்குநராக இருந்த சாய் படேல் பேசுகையில், பெரும்பாலான மக்கள் நம் நாட்டை இரக்கத்துடனும், மரியாதையுடனும் ஒரு வீடாக கருதுகின்றனர். ஆனால் தற்போது இருக்கும் சட்டம், மரணத்தின் விளிம்பில் இருக்கும் மக்களை வீட்டிற்கு அனுப்ப முயற்சிக்கிறது. இந்த சட்டம் மாற வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த விவகாரமானது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பவானியின் விண்ணப்பத்தை மீண்டும் மீளாய்வு செய்வதாக வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.