இலங்கை தற்கொலை குண்டுதாரியை தீவிரமாக்கிய பிரித்தானியர்!

இலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்திய அப்துல் லாதிஃப் ஜமீல் முகமது, பிரித்தானியாவில் வெறுப்பு பிரச்சாரங்களை மேற்கொள்ளும் அன்ஜெம் சௌத்ரியின் பேச்சால் தீவிரமயமாக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தற்கொலை தாக்குதல் நடத்திய அப்துல் லாதிஃப் ஜமீல் முகமது (37), லண்டனில் படித்த போது பிரித்தானியாவின் வெறுப்பு பிரச்சாரக்காரர் என அறியப்படும் அன்ஜெம் சௌத்ரியின் பேச்சால் தீவிரமயமாக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரி ஓருவர் பிபிசிக்கு கூறுகையில், பயங்கரவாத சிந்தனைகளில் எப்போது சிக்கினார் என்பது குறித்து ஜமீல் முகமதுவிடம் நான் கேட்டேன்.

அதற்கு அவர் லண்டனில் உள்ள தீவிர சொற்பொழிவாளரான அன்ஜெம் சௌத்ரியின் பிரச்சாரங்களில் கலந்துகொண்டதாகவும், அந்த சமயங்களில் அவரை சந்தித்ததாகவும் என்னிடம் கூறினார் என தெரிவித்துள்ளார்.

அன்ஜெம் சௌத்ரி இங்கிலாந்தின் மிகவும் ஆபத்தான வெறுப்பு பிரச்சாரங்களை மேற்கொள்பவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவளித்து, அழைப்பு விடுத்ததாக இவர் 2016ம் ஆண்டு கைது செய்யப்பட்டு 2018ம் ஆண்டு வெளியில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.