இந்தியாவின் கண்காணிப்பில் மென்பொருள் பொறியியலாளர்!

இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு உதவிகளை வழங்கினார் என சந்தேகிக்கப்படும் இலங்கையை சேர்ந்த மென்பொருள் பொறியியலாளர் ஒருவரை இந்தியா மூன்று வருடங்களாக கண்காணித்து வந்துள்ளது.

ரொய்ட்டர் செய்தி சேவையை மேற்கோள்காட்டி colombo gazette வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

இலங்கையில், தாக்குதல்களை மேற்கொண்ட குழுக்களுக்கு இடையில் தொடர்பாளராக 24 வயதுடைய ஆதில் அனீஸ் செயற்பட்டு வந்தார் என சந்தேகிப்பதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஐ.எஸ். ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் அந்த இளைஞருக்கு இருந்த தொடர்பு குறித்து இந்தியா கண்காணித்து வந்துள்ளதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த நபர் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள போதிலும், இது குறித்த தகவல்களை இலங்கை அதிகாரிகள் பகிரங்கப்படுத்தவில்லை என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

எனினும் பொலிஸ் ஊடக பேச்சாளர் இதனை உறுதி செய்துள்ளார், கடந்த 25ம் திகதி அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தேசிய புலனாய்வு பிரிவை சேர்ந்த அதிகாரியொருவரும் குஜராத்தை சேர்ந்த அதிகாரியொருவரும் இந்த நபர் குறித்து இலங்கைக்கு தகவல்களை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், கைதுசெய்யப்பட்டுள்ள நபர் பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் அரசியல் பயின்று, பின்னர் கணணித்துறையில் மேற்படிப்பை பூர்த்தி செய்துள்ளார்” என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.